லட்சத்தீவின் கவரெட்டி பகுதியில் மீட்கப்பட்ட 45 தமிழக மீனவர்கள் கொச்சி துறைமுகம் வந்தடைந்தனர்.
வங்கக்கடல் பகுதியில் உருவான ‘ஒகி’ புயல் காரணமாக, கன்னியாகுமரி மாவட்டம் முழுவதும் பலத்த சூறைக்காற்றுடன் கனமழை பெய்தது. அந்த நேரத்தில் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற தமிழகம் மற்றும் கேரளாவைச் சேர்ந்த ஏராளமான மீனவர்கள் மாயமாகினர். அவர்கள் இன்னும் முழுமையாக கண்டுபிடிக்கப்படவிலலை. மீனவர்களை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. மாயமான மீனவர்களை விரைந்து மீட்கக்கோரி கன்னியாகுமரியில் 3-ஆவது நாளாக போராட்டமும் தொடர்ந்து வருகிறது.
இந்நிலையில் ஒகி புயல் சமயத்தில் திசைமாறி சென்ற தமிழக மீனவர்கள் 45 பேர் லட்சத்தீவின் கவரெட்டி பகுதியில் கரை ஒதுங்கியிருந்தனர். நாகை, கன்னியாகுமரி, தூத்துக்குடி பகுதிகளைச் சேர்ந்த இந்த மீனவர்கள் தற்போது பத்திரமாக மீட்கப்பட்டு கொச்சி துறைமுகத்திற்கு வந்தடைந்துள்ளனர். அவர்களை சந்தித்த தமிழக ஐஏஎஸ் அதிகாரி, அவர்களுக்கு தலா 2,000 ரூபாய் நிதி உதவியை வழங்கினார்.