தமிழ்நாடு

4 வழிச்சாலை திட்டத்துக்காக கோவை தேசிய நெடுஞ்சாலையில் வெட்டப்பட்ட 400+ மரங்கள்!

webteam

சாலை விரிவாக்க பணிகளுக்காக கோவை - மேட்டுப்பாளையத்தில் நூற்றுக்கணக்கான மரங்கள் வெட்டப்பட்டு வருகின்றன. அவற்றுக்கு மாற்றாக மாற்று மரக்கன்றுகளை நட்டு பராமரிக்க இயற்கை நல ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கோவையில் இருந்து மேட்டுப்பாளையம் வரையிலான சுமார் நாற்பது கிலோமீட்டர் தொலைவிலான நெடுஞ்சாலை தேசிய நெடுஞ்சாலை துறைக்கு உட்பட்டதாகும். இச்சாலை போக்குவரத்து வசதிக்காக விரிவாக்கம் செய்து நான்கு வழி சாலையாக மாற்றும் பணி நடைபெற்று வருகிறது. இச்சாலையின் அகலம் அதிகரிக்கப்பட்டு விரிவாக்கம் செய்வதால் ரோட்டின் இருபுறமும் வளர்ந்து நிற்கும் பழமையான புளியன், வேப்பம், புங்கன் உள்ளிட்ட மரங்களை வெட்டி அகற்றி சாலை அமைத்து வருகின்றனர்.

இந்த சாலை மேம்பாட்டு பணிக்காக மட்டும் இதுவரை 400-க்கும் மேற்பட்ட பெரிய மரங்கள் வெட்டி அப்புறப்படுத்தப்பட்டுள்ளன. தற்போது மேலும் 246 மரங்களை வெட்ட முடிவெடுக்கப்பட்டு அதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது. இதே போல் மாநில நெடுஞ்சாலை துறைக்கு சொந்தமான மேட்டுப்பாளையம் சத்தியமங்கலம் சாலையிலும் சாலை விரிவாக்க பணிகள் நடைபெற்று வருவதால் சாலையோர மரங்கள் வெட்டப்பட்டு வருகின்றன. பல ஆண்டுகளாய் சாலையில் செல்லும் வாகன புகை மாசை மட்டுப்படுத்தி இவ்வழியே செல்லும் பயணிகளுக்கு நிழலின் குளிர்ச்சியை தந்து பசுமையாய் காட்சியளித்து கொண்டிருந்த மரங்கள் அடுத்தடுத்து வெட்டப்படுவது இயற்கை நல ஆர்வலர்களை கவலையடைய வைத்துள்ளது.

அதிகரிக்கும் வாகன பயன்பாட்டிற்கு ஏற்ப சாலைகள் விரிவாக்கம் செய்யப்படுவது தவிர்க்க இயலாதது என்றாலும் வெட்டப்படும் மரங்களுக்கு ஈடாக புதிய மரங்களை நட்டு, அதனை பராமரிக்க தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைத்துறையினர் கவனம் செலுத்துவதில்லை என வேதனை தெரிவிக்கின்றனர். ஏற்கனவே நகர விரிவாக்கம், அதற்கான வளர்ச்சித்திட்ட பணிகள் என ஏராளமான மரங்கள் வெட்டப்பட்டு கோவை மாவட்டத்தின் பசுமை பாதிக்கப்பட்டு வரும் நிலையில் நெடுஞ்சாலைத்துறையினர் தாங்கள் வெட்டும் மரங்களுக்கு பதிலாக புதிய சாலையோர மரங்களை நடவும் அதனை முறையாக பராமரிக்கவும் முன்வர வேண்டும் என வலியுறுத்துகின்றனர்.