தமிழ்நாடு

ஒகி புயலில் 400 தமிழக மீனவர்கள் காணவில்லை: மத்திய அரசு அறிக்கை

ஒகி புயலில் 400 தமிழக மீனவர்கள் காணவில்லை: மத்திய அரசு அறிக்கை

webteam

ஒகி புயலில் சிக்கிய தமிழக மீனவர்கள் 400 பேரை காணவில்லை என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

டிசம்பர் மாதம் ஒவ்வொரு வருடமும் தமிழக மக்களுக்கு இயற்கைச்சீற்றம் மறக்க முடியாத சுவடுகளை தந்துவிட்டுதான் செல்கிறது. சுனாமி, மழை வெள்ளம், வர்தா புயல் இந்த வரிசையில் இந்த ஆண்டு மக்களுக்கு பெரும் துயராக அமைந்தது ஒகி புயல். நவம்பர் மாத இறுதியில் கன்னியாகுமரி அருகே நிலைக்கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் பின்னர் வலுப்பெற்று புயலாக மாறியது. இந்தப்புயலுக்கு ‘ஒகி’ எனப் பெயரிடப்பட்டது. கன்னியாகுமரியை தாக்கிய இந்தப்புயல் அந்த மாவட்டத்தை சூறையாடியது. இந்நிலையில் கன்னியாகுமரியில் இருந்து மீன்பிடிக்க கடலுக்கு சென்ற மீனவர்களின் நிலை என்னவென்றே தெரியாமல் இருந்தது. புயலில் வழிமாறி சென்ற மீனவர்கள் பலர் வடமாநிலங்களில் கரை ஒதுங்கினர். புயலில் படகு சேதமடைந்து கடலில் தத்தளித்த பல மீனவர்கள் சக மீனவர்களால் மீட்கப்பட்டனர். இன்னும் பலர் கரை திரும்பவில்லை. அவர்கள் நிலை குறித்தும் இன்னும் அதிகாரப்பூர்வமான தகவல் எதுவும் இல்லை.

இந்நிலையில் மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், டிசம்பர் 15 ஆம் தேதி நிலவரப்படி ஒகி புயலில் சிக்கிய 453 தமிழக மீனவர்கள் மீட்கப்பட்டுள்ளனர் என தெரிவித்துள்ளது. கடற்படை, கடலோர காவல்படை, விமானப்படை உதவியுடன் மீனவர்களை மீட்கும் பணி நடந்து வருவதா‌கவும் கூறப்பட்டுள்ளது. தமிழகம், கேரளா, லட்சத்தீவில் இதுவரை 845 பேர் மீட்கப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளது. தமிழகம், கேரளா, லட்சத்தீவுகளில் மொத்தமாக 661 மீனவர்களை காணவில்லை என மத்திய அரசு அறிக்கையில் தெரிவித்துள்ளது. ஒகி புயலில் சிக்கிய தமிழக மீனவர்கள் 400 பேரை காணவில்லை என அறிவித்துள்ளது.