எல்லை தாண்டி மீன்பிடித்ததாக ராமேஸ்வரம் மீனவர்கள் 20 பேர் உட்பட தமிழக மீனவர்கள் 40 பேர் இலங்கைக் கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்டனர்.
ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து நேற்று காலை 500-க்கும் மேற்பட்ட மீன்பிடி விசைப் படகுகளில் 1500-க்கும் மேற்பட்ட மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு சென்றனர். இந்நிலையில் கச்சத்தீவு பகுதியில் மீனவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது அங்கு வந்த இலங்கை கடற்படையினர், எல்லை தாண்டி மீன்பிடித்ததாகக்கூறி 20 மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்தது.
முன்னதாக புதுக்கோட்டையைச் சேர்ந்த 14 மீனவர்கள் 2 படகுகளிலும் காரைக்காலைச் சேர்ந்த 6 மீனவர்களும் ஒரு படகிலும் மீன்பிடிக்கச் சென்றனர். அதேபோல் திரிகோணமலை அருகே காரைக்கால் மீனவர்கள் ஐவர், கச்சத்தீவு அருகே தூத்துக்குடி மீனவர்கள் 14 பேர் என மொத்தம் 19 பேர் சிறைபிடிக்கப்பட்டதாகவும் தெரிகிறது.
இதனையடுத்து ஒரே நாளில் தமிழக மீனவர்கள் 40 பேர் இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட சம்பவம் மீனவர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.