தமிழ்நாடு

4 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்! - முன்னாள் ராணுவ வீரரின் மகன் மிரட்டுவதாக பெற்றோர் புகார் 

4 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்! - முன்னாள் ராணுவ வீரரின் மகன் மிரட்டுவதாக பெற்றோர் புகார் 

webteam

சென்னையில் 4 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்ட வழக்கில் கைதான முன்னாள் ராணுவ வீரரின் மகன், தங்களை மிரட்டுவதாக சிறுமியின் தந்தை கண்ணீருடன் காவல்துறையிடம் மனு அளித்துள்ளார்.

கடந்த ஜூன் மாதம் 4 வயது சிறுமியை பக்கத்து வீட்டுக்காரரான முன்னாள் ராணுவ வீரர் மீனாட்சி சுந்தரம் பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்ததாக தெரிகிறது. சிறுமியை காணாமல் பெற்றோர் தேடிவந்தநிலையில், சடலத்தை அவர் கோணிப்பையில் கட்டி கழிவறை வாளியில் வைத்துவிட்டு சென்றுவிட்டார். இதற்கு அவரது மனைவி ராஜம்மாளும் உடந்தையாக இருந்தது திருமுல்லைவாயல் காவல்துறையினர் விசாரணையில் தெரியவந்தது.

போக்சோ பிரிவிலும், கொலை தொடர்பாகவும் வழக்குப்பதிவு செய்யப்பட்டு 2 பேரும் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் கொல்லப்பட்ட சிறுமியின் தந்தை சென்னை பெருநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் சந்தித்து மனு அளித்துள்ளார். குழந்தையை பறிகொடுத்து தவிக்கும் தங்களை முன்னாள் ராணுவ வீரரின் குடும்பத்தினர் மிரட்டுவதாக அவர் கூறியுள்ளார்.

சிறுமி கொலை வழக்கில் உடற்கூறாய்வு அறிக்கை, தடயவியல் அறிக்கை உள்ளிட்ட அறிக்கைகள் வருவதில் காலதாமதம் ஆவதால் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்வதில் தாமதம் ஏற்படுவதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்படுகிறது. ஆயினும் உரிய தடயங்களை சேகரித்து குற்றவாளிகளை சட்டத்தின் பிடியில் இருந்து தப்பிக்க விடமாட்டோம் என்று திருமுல்லைவாயல் காவல்துறை தரப்பில் கூறப்படுகிறது.