bar
bar pt.desk
தமிழ்நாடு

தி.மலை: 4 வயது மகனை Bar-க்கு அழைத்துச்சென்ற தந்தை... எதை சொல்லித்தருகிறோம் நம் குழந்தைகளுக்கு?

webteam

விழுப்புரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் விஷச் சாராயம் குடித்து 20க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த விவகாரத்தை தொடர்ந்து தமிழகம் முழுவதும் கள்ளச்சாராயம் மற்றும் கள்ளச் சந்தையில் மதுபானம் விற்பனை செய்யப்படுவதை தடுப்பதற்காக அந்தந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் மற்றும் மாவட்ட ஆட்சியர்கள் தலைமையில் பல்வேறு உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன. அதன்படி கள்ளச்சாராயம் காய்ச்சுபவர்கள் மற்றும் விற்பவர்கள், காவல்துறையினரால் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு வருகின்றனர்.

private bar

இதற்கிடையேதான் கடந்த ஞாயிறன்று தஞ்சாவூர் மாவட்டத்தில் கள்ளச் சந்தையில் மதுபானம் குடித்து இருவர் உயிரிழந்தனர். அதைத்தொடர்ந்து மதுபான கூட்டங்களில் அனுமதி இல்லாமல் பார் நடத்துவது, பார் அனுமதி நேரத்தை மீறுவோர் மீது நடவடிக்கை என பல்வேறு கட்டுப்பாடுகளை தமிழக அரசு விதித்து வருகிறது.

இந்நிலையில், தற்போது திருவண்ணாமலையில் மற்றொரு கொடூர சம்பவம் நடந்துள்ளது. திருவண்ணாமலை அண்ணா சாலையில் செயல்பட்டு வரும் தனியார் மதுபானக் கூடமொன்று, இரவு 12 மணி வரை செயல்படுவதாக பல்வேறு புகார்கள் தெரிவிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் நேற்று பிற்பகல் 4 வயது சிறுவனொருவன், அங்கு அவனது தந்தையால் உடன் அழைத்துச் செல்லப்பட்டிருக்கிறான். மதுபானக் கூடத்திற்குள் சென்று மகனை அமர வைத்துக் கொண்ட அந்த தந்தை, சிறுவனின் முன்பு தனது நண்பர்களுடன் மது குடிக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

bar

21 வயதுக்கு மேற்பட்ட நபர்கள் மட்டுமே மதுபானக் கூடங்களில் அமர்ந்து மது அருந்த வேண்டும் என பல்வேறு கட்டுப்பாடுகள் உள்ளது. இதை மீறி 4 வயது சிறுவனை மதுபானக் கூடத்திற்குள் அனுமதி அளித்துள்ளது மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் குறித்து திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிறப்பு விசாரணை நடத்தி ஹோட்டல் நிர்வாகம் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

நம் குழந்தைகளுக்கு நாம் என்ன சொல்லிக்கொடுக்கிறோம் என்பதில்தான், நாமும் இருக்கிறோம்; நம் எதிர்காலமும் இருக்கிறது. இதை உணர்ந்து, தனிநபர்களும் ஒழுக்கமாக இருக்கவேண்டியது அவசியப்படுகிறது. அதேநேரம் தனிநபர்களை கண்காணிக்க வேண்டிய வழிமுறைகளும் இன்னும் கெடுபிடியாக்கப்பட வேண்டும்.