நாமக்கல் மாநகராட்சி பகுதிகளில் பாதாள சாக்கடைத் திட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. 4-வது வார்டுக்கு உள்பட்ட சின்ன முதலைப்பட்டி பகுதியில் பாதாள சாக்கடைத் திட்டத்திற்காக புதன்கிழமை குழி தோண்டப்பட்டிருந்தது. அதில் நீரூற்று உருவாகி தண்ணீர் நிரம்பியதாக தெரிகிறது. இதனால் யாரும் அங்கு செல்லாதவாறு அதனை சுற்றிலும் கம்புகள் நடப்பட்டு சிறிய அளவிலான எச்சரிக்கையை உணர்த்தும் துணி கட்டப்பட்டிருந்ததாக தெரிகிறது.
இந்தநிலையில் இன்று மாலை அந்த துணி அகற்றப்பட்டதாக தெரிகிறது. அங்கு விளையாடிக் கொண்டிருந்த அதே பகுதியைச் சேர்ந்த மணிகண்டன், ரதிபிரியா தம்பதியின் மகன் ரோகித் (4) திடீரென பாதாள சாக்கடை திட்டக் குழிக்குள் தவறி விழுந்துள்ளார். இதனை யாரும் கவனிக்காத நிலையில், விளையாடிக் கொண்டிருந்த சிறுவன் காணாததால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் தேடியுள்ளனர். அப்போது சாக்கடைத் திட்ட குழிக்குள் ரோகித் உயிரிழந்து கிடந்தது தெரியவந்தது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த நாமக்கல் மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
சிறுவன் உயிரிழப்புக்கு மாநகராட்சி அதிகாரிகளின் மெத்தனப் போக்கே காரணம் எனவும் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் உயிரிழந்த சிறுவனின் உறவினர்கள் கோரிக்கை வைக்கின்றனர்.