தமிழ்நாடு

சென்னையில் மேலும் 4 சுங்கச்சாவடிகள் ; வாகன ஓட்டிகள் அதிர்ச்சி !

webteam

சென்னை புறநகர் பகுதியில் மேலும் 4 சுங்கச்சாவடிகள் அமைக்கப்படுவது வாகன ஓட்டிகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சாலையில் வாகனப் பயணம் மேற்கொள்வோரிடம் முப்பது மைல் தூரத்துக்கு ஒரு சாவடி அமைத்து கட்டணம் வசூல் செய்வதுதான் சுங்கவரிச கட்டணம். இதன் படி சுங்கச்சாவடியில் செலுத்தும் கட்டணமும் மக்கள் பயணிக்கும் வாகனத்தை பொருத்து மாறுபடும். இதற்காக சென்னை புறநகர் பகுதியில் மட்டும் 9 சுங்கச்சாவடிகள் உள்ளன. இந்தச் சூழலில் சென்னை புறநகர் பகுதியில் மேலும் 4 சுங்கச்சாவடிகள் அமைக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி வண்டலூர்-நெமிலிச்சேரி வெளிவட்டச் சாலை, நெமிலிச்சேரி-மீஞ்சூர் வெளிவட்டச் சாலை உள்ளிட்ட பகுதிகளில் 2 ஆயிரத்து 160 கோடி ரூபாய் மதிப்பில் 4 சுங்கச்சாவடிகள் அமைக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தச் சூழலில் முடிச்சூர் பகுதியில் சுங்கச்சாவடி அமைக்கும் பணி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில், வரும் ஏப்ரலில் பணி முடிந்து ‌ஜுன் மாதம் முதல் செயல்பாட்டுக்கு வரும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சுங்கச் சாவடி கட்டணத்திற்கான தேசிய கொள்கை அடிப்படையில் கட்டணம் நிர்ணயம் செய்யப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர். மற்ற இடங்களில் சுங்கச் சாவடி அமைக்கும் பணிகள் விரைவில் தொடங்கும் எனவும் கூறப்பட்டுள்ளது. 

ஏற்கெனவே சுங்கச்சாவடிகளை அகற்ற வேண்டும் என பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுக்கும் நிலையில், சென்னை புறநகர் பகுதியில் மேலும் 4 சுங்கச்சாவடிகள் அமைக்கப்படுவது வாகன ஓட்டிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனால் வாகனத்தில் பயணம் மேற்கொள்பவர்கள் கூடுதல் செலவுகளை எதிர்க்கொள்ள நேரிடும் என வாகன ஓட்டிகள் கவலை தெரிவிக்கின்றனர்.