சந்திராயன்-II விண்கலம் விண்ணில் ஏவப்படுவதை நேரில் பார்க்க மேட்டுப்பாளையம் மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில் இருந்து 4 மாணவர்கள் செல்லவுள்ளனர்.
சந்திராயன்-II விண்கலம் வரும் ஜூலை மாதம் 15 ஆம் தேதி விண்ணில் ஏவப்படவுள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது. ஜிஎஸ்எல்வி மார்க் 3 ராக்கெட் மூலம் சந்திராயன் -2 விண்கலத்தை அனுப்பத் திட்டமிடப்பட்டுள்ளது. அதற்கான இறுதிக் கட்ட பணிகளில் இஸ்ரோ விஞ்ஞானிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் சந்திராயன்-II விண்கலம் விண்ணில் ஏவப்படுவதை நேரில் பார்க்க மேட்டுப்பாளையம் மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில் இருந்து 4 மாணவர்கள் செல்லவுள்ளனர். அப்பள்ளியில் படிக்கும் முகமது தாஹீர், சந்தோஷ், மணிகண்டன், ஹரிகிருஷ்ணா ஆகிய மாணவர்களே இஸ்ரோ செல்லவுள்ளனர்.
இது குறித்து பேசிய அறிவியல் ஆசிரியர் சரவணன், ''5 மற்றும் 6ம் வகுப்பு மாணவர்களுக்கு விண்வெளித்துறை தொடர்பான கட்டுரைப்போட்டி வைக்கப்பட்டது. அதில் 4 மாணவர்களை தேர்ந்தெடுத்து கல்விச் சுற்றுலாவுக்கு அனுப்ப திட்டமிட்டோம். அதன்படி சந்திராயன்-II விண்கலம் ஏவப்படுவதை நேரில் பார்க்க ஆன்லைனில் முன்பதிவு செய்யலாம் என்று அறிவிப்பு வெளியானது.
நான் 5 டிக்கெட்டுகளை முன்பதிவு செய்தேன். அந்த முன்பதிவு மூலமாகவே மாணவர்கள் செல்லவுள்ளனர். அவர்கள் சென்று வருவதற்கான செலவுகளை அவரவர்களின் பெற்றோர்களே ஏற்றுக்கொள்வதாக தெரிவித்துள்ளனர். இந்த அனுபவம் மாணவர்களுக்கு சிறப்பானதாக இருக்கும் என நம்புகிறேன்'' என தெரிவித்துள்ளார்.