முதலமைச்சர் படம் ஒட்டிய பாஜகவினர் pt web
தமிழ்நாடு

மதுபானக்கடையில் முதலமைச்சர் படம் ஒட்டிய விவகாரம்; 4 பாஜகவினர் கைது

மேடவாக்கம் மதுபானக்கடையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் படத்தினை ஒட்டிய பாஜகவினர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இரண்டு கடைகளில் முதலமைச்சர் படம் ஒட்டப்பட்ட வழக்கில் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

PT WEB

சென்னை மேடவாக்கம் மேம்பாலம் அருகே வேளச்சேரி பிரதான சாலையில் உள்ள மதுபானக்கடை ஒன்றிற்கு நேற்று பாஜகவை சேர்ந்த சென்னை கிழக்கு மாவட்ட பொதுச் செயலாளர் மாலா செல்வகுமார் தலைமையில் 20க்கும் மேற்பட்டோர் சென்றுள்ளனர். அப்போது, மதுபானக்கடையில் முதல்வர் படத்தை மாட்டி விட்டு ஆர்ப்பாட்டம் செய்துள்ளனர். அதே போல் மேடவாக்கம் மடிப்பாக்கம் பிரதான சாலையில் உள்ள மதுபானக் கடையில் பாஜகவை சேர்ந்த அன்னபூரணி தலைமையில் சென்று முதல்வர் படத்தை மாட்டியுள்ளனர்.

இது குறித்து டாஸ்மாக் விற்பனையாளர் மேடவாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் முதல்வர் பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் செயல்பட்டதாகவும், படம் ஒட்டியதாகவும் வழக்குப்பதிவு செய்து பாஜகவினர் 4 பேரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

சில தினங்களுக்கு முன்பு பாஜக தலைவர் அண்ணாமலை டாஸ்மாக் 1000 கோடி ஊழலை கண்டித்து போராட்டம் நடத்த சென்றபோது, காவல்துறை வழியிலேயே கைது செய்தது. பின்னர் மாலை விடுவிக்க கால தாமதமானதால் வெளியில் வந்த அண்ணாமலை மதுபானக் கடைகளில் முதல்வர் படம் மாட்டப்படும் என தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.