திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே கடன் தொல்லை காரணமாக விவசாய குடும்பத்தை சேர்ந்த 4 பேர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பூர் மாவட்டம் செட்டிதோட்டத்தை சேர்ந்த விவசாயி முத்துசாமி என்பவர் குத்தகை நிலத்தில் விவசாயம் செய்து வந்த நிலையில், அவருக்கு கடன் அதிகமானதாக தெரிகிறது. கடன் தொல்லை காரணமாக மனமுடைந்த முத்துசாமி தனது 11 வயது மகள் ராஜலட்சுமி, 4 வயது மகன் மாணிக்க மூர்த்தி ஆகியோரை வீட்டிற்குள் தூக்கிலிட்டதாக கூறப்படுகிறது. அதன்பின்னர் முத்துசாமியும், அவரது தாய் மயிலாத்தாளும் வீட்டிற்கு வெளியே உள்ள வேப்ப மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக தெரிகிறது.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் நான்கு பேரின் உடலையும் தாராபுரம் அரசு மருத்துமனைக்கு அனுப்பி, சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விவசாயி முத்துசாமி தனது மனைவி செல்வியை வெளியூருக்கு அனுப்பி வைத்துவிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். விவசாயத்தில் சரியான வருமானம் இல்லாததால், முத்துசாமி பல்வேறு இடங்களில் கடன் வாங்கியதாக அவரது மனைவி செல்வி தெரிவித்துள்ளார்.