கிருஷ்ணகிரி அருகே கட்டுப்பாடின்றி அதிவேகத்தில் முந்திச்சென்ற இரண்டு கார்கள் மோதியதில் சாலையில் நடந்து சென்ற 4 பேர் உயிரிழந்தனர். இதையடுத்து அப்பகுதி மக்கள் விபத்து ஏற்படுத்திய கார்களை எரித்ததோடு, சாலைமறியல் செய்தனர். அவர்களை காவல்துறையினர் தடியடி நடத்தி விரட்டியடித்தனர்.
கிருஷ்ணகிரி அருகே கந்திக்குப்பம் என்ற இடத்தில் இன்று காலை இரண்டு கார்கள் அதிவேகத்தில் முந்திக்கொண்டு ஓடியதில் இரு கார்களும் மோதிக்கொண்டன. அப்போது இருகார்களும் சாலையில் நடந்து சென்றுகொண்டிருந்த 4 பேர் மீது மோதின. மோதிய வேகத்தில் அரை கிலோமீட்டர் தூரத்திற்கு தூக்கி வீசப்பட்டு 4 பேரும் உடல் சிதறி உயிரிழந்தனர். மேலும் 5 வாகனங்களும் சேதமடைந்தன.
இதையடுத்து அந்த பகுதியில் திரண்ட ஏராளமானோர் விபத்தை ஏற்படுத்திய கார்களை தீ வைத்து எரித்தனர். இந்தப்பகுதியில் தொடர்ந்து விபத்துகள் நடக்கும் நிலையில் அந்த பகுதியில் மேம்பாலம் கட்டித் தராததை கண்டித்து ஆயிரத்திற்கும் அதிகமானோர் சாலைமறியலில் ஈடுபட்டனர்.
மறியல் போராட்டத்தால் அந்த பகுதியில் பதற்றமான சூழல் நிலவியது. விபத்து மற்றும் மறியலால் சென்னை பெங்களூரு சாலையின் ஏறக்குறைய ஒன்றரை மணி நேரம் போக்குவரத்து முற்றிலும் முடங்கியது. இதனால், ஆயிரக்கணக்கான வாகனங்கள் சாலையின் இருபுறமும் நின்றன. மறியலில் ஈடுபட்டவர்கள், சாலையின் நடுவே டயர்களை எரித்தும், வாகனங்களை தாக்கியும் வன்முறையில் ஈடுபட்டனர். மறியல் நீடித்த நிலையில், போலீசார், வருவாய் கோட்டாட்சியர் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். எனினும் போராட்டக்காரர்கள் கலைந்து செல்ல மறுத்த நிலையில் போலீசார் தடியடி நடத்தினர்.
தடியடியில் பத்துக்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். சம்பவம் தொடர்பாக 50-க்கும் அதிகமானோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. விபத்தில் காயமடைந்த 4 பேரும் மருத்துவமனையில் சிகிச்சைப்பெற்று வருகிறார்கள்.