தமிழக அரசியலில் அதிமுக பலவீனமடைந்த நிலையில், தவெக ஆட்சியில் வலுவாக நிலைநிறுத்திக் கொண்டுள்ளது. இந்த சூழலில் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் கடம்பூர் ராஜூ, எம்.சி.சம்பத், உடுமலை ராதாகிருஷ்ணன், எம்.எஸ்.எம். ஆனந்தன் உள்ளிட்டோர், நூற்றுக்கணக்கான ஆதரவாளர்களுடன் தவெகவில் இணையவிருக்கும் சம்பவம், அதிமுகவில் நிலவும் உட்கட்சிப் பிளவு அதிகமானதை வெளிப்படுத்துகிறது.
தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் தனிப்பெருங்கட்சியாக உருவெடுத்த தவெக, காங்கிரஸ், விசிக, இடதுசாரிகள் மற்றும் ஐயூஎம்எல் ஆகிய கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சியமைத்துள்ளது. அதேசமயம், இத்தேர்தலில் எடப்பாடி கே.பழனிசாமி தலைமையிலான அதிமுக படுதோல்வியடைந்தது. குறிப்பாக, எதிர்க்கட்சி அந்தஸ்தைக்கூடப் பெற அக்கட்சி தவறியது. தோல்வி காரணமாக அக்கட்சியில் உட்கட்சிப் பூசல் நிலவி வருகிறது. இதனால் எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் என ஒரு குழுவாகவும், எடப்பாடி பழனிசாமி ஒரு குழுவாகவும் இயங்கி வருவதாக சொல்லப்படுகிறது.
இதற்கிடையே பல அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் பதவியிலிருந்து விலகி தங்களை தவெகவில் இணைத்துக்கொண்டனர். இப்படியான சூழலில் தற்போது பல முன்னாள் அதிமுக அமைச்சர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் இன்று தவெகவில் இணையவிருக்கின்றனர்.
சென்னை பனையூரில் உள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் தலைமை அலுவலகத்தில் முன்னாள் அமைச்சர்கள் 4 பேர் மற்றும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் 9 பேர் தவெகவில் இணையவுள்ளதாக தகவல் வெளியான நிலையில், தற்போது அதிமுக முன்னாள் அமைச்சர்கள் எம்.சி.சம்பத் மற்றும் கடம்பூர் ராஜூ இருவரும் தவெக தலைமை அலுவலகத்தில் வருகைபுரிந்துள்ளனர்.
தகவலின் படி முன்னாள் அமைச்சர்கள் எம்.சி.சம்பத், கடம்பூர் ராஜூ உடன், உடுமலை ராதாகிருஷ்ணன் மற்றும் எம். எஸ்.எம் ஆனந்தன் ஆகியோரும் தங்களுடைய ஆதரவாளர்களுடன் கட்சியில் இணையவிருப்பதாக சொல்லப்படுகிறது. எம்.சி.சம்பத் தலைமையில் 500 பேர் தவெக கட்சியில் இணையவுள்ளனர்.
முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்களை பொறுத்தவரையில், பாப்பிரெட்டிப்பட்டி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கோவிந்தசாமி, சங்ககிரி தொகுதி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சுந்தரராஜ், வீரபாண்டி சட்டமன்றத் தொகுதி ராஜமுத்து, ஸ்ரீவில்லிபுத்தூர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மான்ராஜ் போன்றவர்கள் இணையவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.