தமிழ்நாடு

‘மொய்விருந்தில் ஒருவருக்கு 4 கோடி வசூல்’ - புதுக்கோட்டை ஆச்சரியம்

‘மொய்விருந்தில் ஒருவருக்கு 4 கோடி வசூல்’ - புதுக்கோட்டை ஆச்சரியம்

Rasus

புதுக்கோட்டை மாவட்டத்தில் இன்று நடந்த ஒரு மொய்விருந்தில், கிருஷ்ணமூர்த்தி என்பவருக்கு அதிகபட்ச மொய் தொகையாக 4 கோடி ரூபாய் வசூலாகியுள்ளது.

ஆரம்ப காலகட்டத்தில் தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி மற்றும் அதனைச் சுற்றிய பகுதிகளில், சமூகத்தில் பின் தங்கியுள்ள மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதற்காக முதன் முதலில் தொடங்கப்பட்டதுதான் மொய்விருந்து விழாக்கள். அது மெல்ல மெல்ல வளர்ந்து புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம், கொத்தமங்கலம் வடகாடு, மாங்காடு மற்றும் அதனைச் சுற்றிய பகுதிகளிலும் பரவி தற்போது இந்த மொய் விருந்து விழாக்கள் இந்தப் பகுதி மக்களுக்கு வர்த்தகம் சார்ந்த வாழ்வாதாரமாகவும் மாறிப்போனது.

இந்நிலையில் வடகாடு கிராமத்தில் இன்று நடைபெற்ற கிருஷ்ணமூர்த்தி என்பவரது வீட்டு மொய் விருந்திற்காக 50 ஆயிரம் பத்திரிகை அச்சடித்து விநியோகம் செய்யப்பட்டு இருந்தது. அதன்படி இன்று நடந்த விருந்தில் ஆயிரம் கிலோ ஆட்டுக்கறி சமையல் செய்யப்பட்டு 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இந்த மொய் விருந்தில் கலந்து கொண்டனர்.

கிருஷ்ணமூர்த்தி கடந்த நான்கு ஆண்டுகளாக 3 கோடி ரூபாய்க்கு மேல் இந்தப் பகுதியில் மொய் செய்திருந்த நிலையில் இன்று அவருக்கு 4 கோடி ரூபாய் வசூல் ஆகி உள்ளதாக கூறப்படுகிறது. இதை வைத்துக் கொண்டு தன்னுடைய வியாபாரத்தை விருத்தி செய்து கொள்ளப் போவதாக அவர் தெரிவித்துள்ளார்.

கடந்த ஆண்டு வரை விழாவில் விருந்து உண்பவர்களுக்கு தண்ணீர் பாக்கெட்டுகள் வழங்கப்பட்டு வந்தது. ஆனால் இந்த ஆண்டு நெகிழிப் பொருட்களுக்கு அரசு தடை விதித்ததை அடுத்து விருந்தினர்களுக்கு பழங்கால முறைப்படி குவளைகளில் தண்ணீர் வழங்கி நெகிழ வைத்தனர் விழா அமைப்பாளர்கள். அதேபோல் விழா நடக்கும் பந்தல்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்படுகிறது. இதன் மூலம் அசம்பாவிதங்கள் ஏதும் நடக்காமல் முன்னெச்சரிக்கையாக தடுக்கப்படுகிறது என்றும் விழா அமைப்பாளர்கள் கூறியுள்ளனர்.

கடந்த ஆண்டு 500 கோடி வரையில் மொய் பணம் வசூல் ஆன நிலையில் இந்த ஆண்டு கஜா புயல் ஏற்படுத்திய பாதிப்புகளால் அப்பகுதி மக்கள் பொருளாதார ரீதியில் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே இந்த ஆண்டு 250 கோடி முதல் 300 கோடி ரூபாய் வரையில் மொய் வசூல் ஆகும் எனக் கூறப்படுகிறது.

சுப.முத்துப்பழம்பதி, செய்தியாளர் (புதுக்கோட்டை)