படியில் தொங்கியபடி பேருந்து பயணம் - உயிரிழந்த 4 மாணவர்கள்
படியில் தொங்கியபடி பேருந்து பயணம் - உயிரிழந்த 4 மாணவர்கள் புதிய தலைமுறை
தமிழ்நாடு

செங்கல்பட்டு - பேருந்து படிக்கட்டில் தொங்கியபடி பயணம்.. கல்லூரி மாணவர்கள் 4 பேர் உயிரிழப்பு!

ஜெனிட்டா ரோஸ்லின்

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே தனியார் கலை மற்றும் அறிவியல் கல்லூரியொன்று செயல்பட்டு வருகிறது. இக்கல்லூரிக்கு சுற்றுவட்டார பகுதிகளிலிருந்து மாணவர்கள் பேருந்தில் செல்வது வழக்கம்.

அப்படி இன்றும் வழக்கம் போல கல்லூரிக்கு சென்று கொண்டிருந்த மாணவர்கள் சிலர், படிக்கட்டுகளில் தொங்கி கொண்டு பயணம் செய்தவாறு சென்றுள்ளனர். மேல்மருவத்தூர் அருகே இப்பேருந்து சென்று கொண்டிருந்தபோது அருகில் வந்த வாகனம் ஒன்று பேருந்தினை முந்திச்செல்ல முயன்றுள்ளது. இதனால் பேருந்து ஓட்டுநர் பேருந்தினை இடது பக்கமாக திருப்பியுள்ளார்.

மேல்மருவத்தூர் சாலை விபத்து - மாணவர்களை நசுக்கிய கண்டெய்னர் லாரி

அப்போது, இடப்பக்கமாக வந்த கண்டெய்னர் லாரி ஒன்று பேருந்தின்மீது உரசியதில், படியில் தொங்கிக் கொண்டிருந்த மாணவர்களை வாகனம் நசுக்கியுள்ளது.

இதனால், சம்பவ இடத்திலேயே பரிதாபமாக 3 மாணவர்கள் உயிரிழந்துள்ளனர். மேலும் 5 க்கும் மேற்பட்ட மாணவர்கள் படுகாயம் அடைந்த நிலையில் அவர்கள் உடனடியாக அருகில் இருந்த மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.

உயிரிழந்த மாணவர்கள் தனுஷ், ரஞ்சித், கமலேஷ், மோனிஷ்

சிகிச்சை பெற்று வந்தவர்களில் 1 மாணவர் மருத்துவமனையில் உயிரிழந்துள்ளார். மொத்தமாக இக்கோர விபத்தில் மோனிஷ், கமலேஷ், தனுஷ் மற்றும் ரஞ்சித் என 4 கல்லூரி மாணவர்கள் உயிரிழந்துள்ளனர்.

சம்பவம் தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மாணவர்களின் உடல்கள் கைப்பற்றப்பட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதையடுத்து அப்பகுதியில் மிகுந்த பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பேருந்து நடத்துநர், ஓட்டுநர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரியும் கோரிக்கைகள் எழுந்துள்ளன. அதேநேரம் அப்பகுதியில் போதிய பேருந்து வசதி இல்லாமையும் மாணவர்கள் இப்படி பயணிக்க ஒரு காரணமாக சொல்லப்படுகிறது. விரைந்து இவ்விவகாரத்தில் அரசு நடவடிக்கை எடுக்க கோருகின்றனர் அப்பகுதி மக்கள் மற்றும் பிற கல்லூரி மாணவர்கள்.