முருகன்,அசோக் , நந்தகுமார்,மோகன்
முருகன்,அசோக் , நந்தகுமார்,மோகன் pt
தமிழ்நாடு

சென்னையில் மின்கம்பத்தில் கட்டிவைத்து திருநங்கை மீது கொடூர தாக்குதல் - 4 பேர் கைது

ஜெனிட்டா ரோஸ்லின்

செய்தியாளர்: சாந்த குமார்

சமீபகாலமாக குழந்தை கடத்தல் தொடர்பான வதந்திகள், செய்திகளாகவும் காணொளிகளாவும் சமூக வலைதளத்தில் அதிகம் பரவி வருகின்றன. இதில் சில நாட்களுக்கு முன்பு வாட்ஸ்-அப் வழியாக, மாணவர் ஒருவரை கடத்திய நபர் என ஒருவரின் புகைப்படமொன்று பரவியதாக தெரிகிறது.

இந்நிலையில் ‘அந்தப் புகைப்படத்தில் இருந்த குழந்தை கடத்திய நபர் இவர்தான்’ என நினைத்து திருநங்கை ஒருவரை மின்கம்பத்தில் கட்டி வைத்து அரைநிர்வாணமாக்கி சிலர் தாக்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தாக்கப்பட்ட திருநங்கை தனா

தாக்கப்பட்ட திருநங்கை தனா

சென்னை பல்லாவரம் அடுத்த பம்மல் பகுதியை சேர்ந்தவர் திருநங்கை தனா. வயது 25. இவர் மென்பொருள் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் சம்பவ தினமான கடந்த பிப்ரவரி 18ம் தேதி மூங்கில் ஏரி பகுதியில் நடந்து சென்றுள்ளார் இவர்.

அப்போது அப்பகுதியில் இருந்த சிலர், குழந்தை கடத்த வரும் நபர் என திருநங்கை தனாவை எண்ணி, அவரை பிடித்து ஆடைகளை களைந்து, அரை நிர்வாணமாக்கி கம்பத்தில் கட்டி வைத்து அடித்து கொலைவெறி தாக்குதல் நடத்தியுள்ளனர்.

இதில் ஆடைகள் கிழிந்த நிலையில் திருநங்கை கண்ணீர் விட்டு கதறியுள்ளார். அப்போது சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் திருநங்கையை மீட்டு காப்பாற்றியுள்ளனர். இந்நிலையில் திருநங்கையை அவர்கள் தாக்கிய காட்சிகள் வீடியோவாக பதிவு செய்யப்பட்டு சமூக வலைதளத்தில் வைரலாகியுள்ளது.

வழக்குப் பதிவு

முருகன்,அசோக் , நந்தகுமார்,மோகன்

இதனையடுத்து, திருநங்கையை தாக்கிய நந்தகுமார் (27), முருகன்(42) ஆகிய இருவர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் பெண்கள் வன்கொடுமை சட்டம், தாக்குதல், மிரட்டல், ஆபாசமாக பேசுவது உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குபதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். மேலும் இந்த சம்பவத்தோடு தொடர்புடைய அசோக் குமார், மோகன் என்று இருவர் இன்று கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களை காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.

இந்நிலையில் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து திருநங்கை கிரேஸ் பானு, தனது சமூக வலைதளப்பக்கத்தில் தனது கண்டனத்தினை பதிவு செய்துள்ளார்.

அதில், “திருநங்கைங்க அராஜகமா நடந்துக்குறாங்க, பலவந்தமா காசு கேக்குறாங்க, பாலியல் தொழிலுக்கு அழைத்து காசு பிடுங்குறாங்க என்பதான குற்றச்சாட்டுகளை அடுக்கடுக்காக அடுக்கி வைத்துக் கொண்டே இருக்கும் இந்தப் பொதுச் சமூகமே...

திருநங்கை கிரேஸ் பானு

குரோம்பேட்டை அருகே ஐ.டி. நிறுவனத்தில் பணியாற்றும் திருநங்கை இதில் என்ன செய்தார் என்பதை விளக்க முடியுமா?..

நாங்கள் கடினமாக உழைத்துப் படித்து முன்னேறினாலும் குழந்தைகளை கடத்திச் செல்பவர்களாகச் சித்தரித்து கம்பத்தில் கட்டிவைத்து உதைத்த கும்பல் எத்தகையது ? அது வெறும் கும்பல் அல்ல. அதுதான் பாலாதிக்கச் சமூகம். மாறிய பாலினத்தோருக்கு எதிரான அதன் கொக்கரிப்புகளே இந்தியாவின் கூட்டு மனசாட்சி.

கல்வி வேலைவாய்ப்பில் உரிமைப் பெற்று இந்த பொதுச் சமூகம் அணுகுகின்ற அதிகாரிகளாக, ஆசிரியர்களாக, விஞ்ஞானிகளாக நாங்கள் மாறும் போதுதான் இந்தப் பாலாதிக்கக் காட்டுமிராண்டித்தனங்கள் கட்டுக்குள் வரும்.

எங்களுக்கான கிடைமட்ட இடப்பங்கீட்டு உரிமையை மறுக்கும் இந்த அரசின் மெத்தனப் போக்குகளே இந்த காட்டுமிராண்டிகளுக்கு உரமாக அமையும்! ” என்று தெரிவித்துள்ளார். இதில் இன்னொரு கொடுமை என்னவெனில், சம்பவத்தின்போது மக்கள் பலரும் அங்கிருந்துள்ளனர். அதை பலரும் வீடியோவாக எடுத்துள்ளனர். யாரும் அவர்களை தடுக்கவில்லை.

குழந்தை கடத்தல் தொடர்பான வதந்திகள் அதிகம் பரவி வருவதாகவும், அவற்றை நம்பவேண்டாம் என்று ம்சென்னை பெருநகர காவல்துறையும் சமீபத்தில்தான் அறிக்கையொன்று வெளியிட்டிருந்தது. அப்படியான நிலையில் நடந்துள்ள இச்சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.