தமிழ்நாடு

கீழடியில் அகழாய்வை விரிவுப்படுத்த கூடுதலாக 4 குழிகள்: ஆயத்தப் பணிகளில் பணியாளர்கள்

webteam

கீழடியில் அகழாய்வை விரிவுபடுத்தும் வகையில் கூடுதலாக 4 குழிகள் தோண்டப்பட்டு வருகிறது. 

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் தாலுகா, கீழடியில் தமிழக தொல்லியல் துறைச் சார்பாக 6 ஆம் கட்ட அகழாய்வு பணிகள் பிப்ரவரி 19 ம் தேதி முதல் துவங்கி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு அகழாய்வு பணிகள் தாமதமாக நடைபெற்று வந்த நிலையில்,  ஊரகப் பகுதிகளில் குறைந்த அளவு பணியாளர்களைக் கொண்டு பணிகளை மேற்கொள்ளலாம் என்று அரசாணை பிறப்பிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து மீண்டும் அகழாய்வு பணிகள் கீழடியில் துவங்கி தற்போது வேகமாக நடைபெறுகிறது.

பிப்ரவரி மாதம் முதல் நடைபெற்று வரக்கூடிய இந்த அகழாய்வு பணிகளில் தற்போது வரை 10 குழிகள் தோண்டப்பட்டு அகழாய்வு பணிகள் நடைபெற்று வருகிறது. அக்குழிகளில் இருந்து சுடுமண்ணால் செய்யப்பட்ட செங்கற்கள் மற்றும் கட்டுமான சுவர் போன்றவையும், விலங்கின் எலும்பு, எடைக்கற்கள், பாசிகள் உட்பட ஏராளமான பொருட்கள் அகழாய்வில் கண்டறியப்பட்டன. ஐந்தாம் கட்ட அகழாய்வுப் பணிகள் நடைபெற்ற இடத்தின் அருகேயும் அகழாய்வுப் பணிகளை விரிவுப்படுத்தும் வகையில் கூடுதலாக 4 குழிகள் தோண்டுவதற்கான ஆயத்தப் பணிகளில் பணியாளர்கள் ஈடுபட்டு உள்ளனர்.

நான்கு மற்றும் ஐந்தாம் கட்ட ஆய்வு பணிகளில் கண்டறியப்பட்ட பொருட்களை விட ஆறாம் கட்டப்பணியில் அதிகமான பொருட்கள் கிடைத்து வருவது குறிப்பிடத்தக்கது.