தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 4,231 பேருக்கு கொரோனா நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்பு வரை நாள்தோறும் நான்காயிரத்திற்கும் மேற்பட்டோர் கொரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டு வந்தனர். இதையடுத்து கடந்த 3 நாட்களாக நான்காயிரத்திற்கும் குறைவானோர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆனால், இன்று ஒரே நாளில் 4.231 பேருக்கு கொரோனா நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் இதுவரை கொரோனாவில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,26,581 ஆக உயர்ந்துள்ளது.
மேலும், தமிழகத்தில் இன்று மட்டும் 3,994 பேர் கொரோனாவில் இருந்து மீண்டு டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால் ஒட்டு மொத்தமாகத் தமிழகத்தில் இதுவரை குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 78,161 ஆக உயர்ந்துள்ளது.
சென்னையைப் பொறுத்தவரை இன்று ஒரே நாளில் மட்டும் 1,216 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை மொத்தம் சென்னையில் மட்டும் நோயாளிகளின் எண்ணிக்கை 73,728 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் இன்று கொரோனா பாதிப்புக்கு 65 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை மொத்தம் 1,765 பேர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.