தேனி மாவட்டத்தில் 39 வயது முகேஷ், 17 வயது சிறுமியை திருமணம் செய்வதாக ஏமாற்றி பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில், போக்சோ சிறப்பு நீதிமன்றம் 20 ஆண்டு கடுங்காவல் சிறை மற்றும் 10,000 ரூபாய் அபராதம் விதித்துள்ளது.
தேனி மாவட்டம் அனைத்து மகளிர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியைச் சேர்ந்த முகேஷ் (வயது 39) என்ற நபர் 2023ஆம் ஆண்டு 17 வயது சிறுமியிடம் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி பழகி சிறுமியிடம் பாலியல் வன்புணர்வில் ஈடுபட்டதாக சிறுமியின் பெற்றோர் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் அடிப்படையில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கின் விசாரணை அறிக்கை தேனி மாவட்ட போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வந்தது. இந்நிலையில் இன்று வழக்கு விசாரணை முடிவுற்று இளைஞர் விஜய் குற்றவாளி என தீர்மானிக்கப்பட்டது.
சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த குற்றத்திற்காக 2019ஆம் ஆண்டு குழந்தைகள் பாலியல் குற்றங்களில் இருந்து பாதுகாப்பு திருத்த சட்ட பிரிவு 6ன் கீழ் 20 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை, 10000ரூபாய் அபராதம், அபராதத்தை கட்ட தவறினால் மேலும் 3 மாதம் மெய்க்காவல் சிறை தண்டனை வழங்கி உள்ளார் போக்சோ சிறப்பு நீதிமன்ற நீதிபதி திருமதி எழில்.
மேலும் சிறுமியின் கல்வி மற்றும் எதிர்கால வாழ்விற்காக தமிழக அரசு 5 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் நீதிபதி தனது தீர்ப்பில் உத்தரவிட்டுள்ளார்.