ranipet
ranipet pt
தமிழ்நாடு

தமிழ்நாட்டை மிரட்டிய மிக்ஜாம் புயல்.. ஒரே மாவட்டத்தில் இடிந்து விழுந்த 34 வீடுகள்..

யுவபுருஷ்

மிக்ஜாம் புயல் காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கடந்த 2 நாட்களாக கனமழை கொட்டித்தீர்த்து வருகிறது. இந்நிலையில், கனமழை காரணமாக ராணிப்பேட்டை மாவட்ட மக்களும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

மிக்ஜாம் புயல் மற்றும் வடகிழக்கு பருவம் மழை காரணமாக ராணிப்பேட்டை மாவட்டம் முழுவதும் தொடர் கன மழை பெய்து வந்ததை தொடர்ந்து கடந்த 24 மணி நேரத்தில் மின்னல் பகுதியில் 104.1 மில்லி மீட்டர், வாலாஜா 90.35 மில்லி மீட்டர், பனப்பாக்கம் 82.4 மில்லி மீட்டர், சோளிங்கர் 68.6 மில்லி மீட்டர் என மாவட்ட முழுவதும் பதிவான மழையின் மொத்த அளவாக 701.05 மில்லி மீட்டர் ஆகவும், மாவட்டத்தின் சராசரி மழையின் அளவாக 63.73 மில்லி மீட்டர் மழை பதிவானது.

இதன் தொடர்ச்சியாக ராணிப்பேட்டை மாவட்டம் முழுவதும் பெய்த கன மழையினால் 34 வீடுகள் இடிந்து சேதமடைந்துள்ளது. இந்த வீடுகளில் குடியிருந்த குடும்பத்தினரை மாவட்ட நிர்வாகம் சார்பில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த முகாம்களில் பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டு அடிப்படை தேவைகள் மற்றும் வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளது.

வீடுகள் இடிந்து சேதமடைந்த குடும்பத்தினருக்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் முதற்கட்டமாக 4600 முதல் 5200 ரூபாய் வரை வழங்கப்பட்டுள்ளது. மேலும் தொகுப்பு வீடு வழங்குவதற்கான கணக்கெடுப்பு ஆய்வு விசாரணை மேற்கொண்டு, பின்னர் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.