தமிழ்நாடு

``தமிழகத்தில் புதிதாக 31 கலை அறிவியல் கல்லூரிகள் தொடங்கப்பட்டுள்ளன”– பொன்முடி தகவல்

webteam

திமுக அரசு பொறுப்பேற்றதில் இருந்து இதுவரை 31 புதிய கலை அறிவியல் கல்லூரிகள் தொடங்கப்பட்டுள்ளதாக சட்டப் பேரவையில் அமைச்சர் பொன்முடி தெரிவித்தார்.

சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின் போது பேசிய உத்திரமேரூர் சட்டமன்ற திமுக உறுப்பினர் சுந்தர், வாலாஜாபாத் அருகே புதிய கலை அறிவியல் கல்லூரியில் துவங்குவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். அவர் பேசுகையில், “வாலாஜாபாத் சுற்றுப்புற பகுதிகளில் அதிகமான அரசு பள்ளிகள் இருக்கின்றன. இங்கிருந்து பல்லாயிரக்கணக்கான மாணவர்கள் வெளியே வருகிறார்கள். பெண் கல்வி திட்டத்தால் அதிகமான மாணவிகள் பள்ளிகளில் படித்து உயர்கல்விக்கு செல்கிறார்கள். அவர்கள் தற்போது உத்திரமேரூர், சென்னை போன்ற இடங்களுக்கு செல்ல வேண்டி இருக்கிறது. எனவே  புதிய அரசு கலை அறிவியல் கல்லூரி துவங்குவதற்கு அரசு ஆவண செய்ய வேண்டும்” என்று வலியுறுத்தினர்.

இதற்கு பதிலளித்து பேசிய அமைச்சர் பொன்முடி, “உத்திரமேரூர் தொகுதியில் மூன்று கல்லூரிகள் செயல்பட்டு வருகிறது. சுற்றுப் புறங்களில் அதிகமான கல்லூரிகள் இயங்கி வருவதாலும் தற்போது புதிய கலை அறிவியல் கல்லூரி தொடங்க வேண்டிய அவசியம் இல்லை” எனக் கூறினார். மேலும் பேசுகையில், தமிழகம் முழுவதும் புதிதாக 31 கலை அறிவியல் கல்லூரிகள் தொடங்கப்பட்டுள்ளன எனக்கூறி அரசு கலை அறிவியல் கல்லூரிகள் இல்லாத தொகுதிகளில் வரும் ஆண்டுகளில் புதிய கல்லூரிகள் தொடங்கப்படும் என்றும் பதிலளித்தார்.