வெடிகுண்டு மிரட்டல் web
தமிழ்நாடு

அதிர்ச்சி.. தமிழகத்திலிருந்து அமெரிக்க ராணுவத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்! 300 மெயில் ஐ.டி. பயன்பாடு!

தமிழகம் முழுவதும் 300-க்கும் மேற்பட்ட மெயில் ஐ.டி.களிலிருந்து வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது ATS போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது.

ஜெ.அன்பரசன்

தமிழகத்தில் விடுக்கப்பட்ட அதே மர்ம நபர்கள் அமெரிக்க ராணுவம், சைனா தூதரக தலைமை அலுவலகம், பாகிஸ்தான் தலைமை தூதரகம், இலங்கை தலைமை தூதரகம் ஆகியவற்றுக்கும் தமிழகத்தின் பெயரிலேயே வெடிகுண்டு மிரட்டல் விடுத்தது விசாரணையில் அம்பலமாகியுள்ளது.

அண்ணா பல்கலைக்கு மட்டும் ஒன்றரை ஆண்டுகளில் 18 முறை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. இந்த குற்றச்செயல்களை கண்டுபிடிக்க 4 வகைகளாக பிரித்து தீவிரவாத தடுப்புப் பிரிவு போலீசார் விசாரணையை தீவிரப்படுதியுள்ளனர்.

குறிப்பிட்ட நேரம்/நாள்களில் மெயில் தரவுகள் மறைவதால் சிக்கல் ஏற்பட்ட நிலையில், குஜராத் வரை சென்று ATS போலீசார் விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.

பகீர் பின்னணி..

தமிழகம் முழுவதும் கடந்த 1.5 ஆண்டுகளில் பதிவான வெடிகுண்டு மிரட்டல் சம்பவம் தொடர்பான வழக்குகள் அனைத்தும் தீவிரவாத தடுப்பு பிரிவுக்கு (Anti terrorism Squad) மாற்றம் செய்யப்பட்டது. இதில் சென்னையில் மட்டும் 20க்கும் மேற்பட்ட வழக்குகள் அடங்கும். இந்த நிலையில், வெடிகுண்டு மிரட்டல் வழக்கு விசாரணையில் பல்வேறு தகவல்கள் கிடைக்கப்பெற்ற நிலையில் தீவிரவாத தடுப்பு பிரிவு போலீசார் விசாரணையை துரிதப்படுத்தியுள்ளனர்.

தீவிரவாத தடுப்பு பிரிவு போலீசார் விசாரணையில், இதுவரை 300-க்கும் மேற்பட்ட இமெயில் ஐடிகளில் இருந்து பள்ளிகள், கல்லூரிகள், நட்சத்திர விடுதிகள், வழிபாட்டுத் தலங்கள், மருத்துவமனைகள், மால்கள், விமான நிலையம், ரயில் நிலையங்கள் என வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.

வெடிகுண்டு மிரட்டல்

மேலும், தமிழகத்தில் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த அதே மர்ம நபர்கள் அமெரிக்க ராணுவம், சைனா தூதரக தலைமை அலுவலகம், பாகிஸ்தான் தலைமை தூதரகம், இலங்கை தலைமை தூதரகம் ஆகியவற்றுக்கும் தமிழகத்தின் பெயரிலேயே வெடிகுண்டு மிரட்டல் விடுத்தது விசாரணையில் அம்பலமாகியுள்ளது.

தமிழகத்தில் விடுக்கப்பட்ட மொத்த வெடிகுண்டு மிரட்டல் சம்பவங்களில் அண்ணா பல்கலைக்கழகத்துக்கு மட்டுமே இதுவரை 18 முறை வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

விசாரணையை வேகப்படுத்திய போலீஸார்..

இதனையடுத்து இந்த விசாரணையை நான்கு வகைகளாக பிரிக்கப்பட்டு விசாரணையானது தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

தனிநபர் விரோதம், அரசியல் காரணங்கள், பொதுமக்களை அச்சுறுத்துவது, ஐஏஎஸ் - ஐபிஎஸ் அதிகாரிகள் பெயரிட்டு மிரட்டல் விடுப்பது உள்ளிட்ட நான்கு வகைகளாக பிரித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

வெடிகுண்டு மிரட்டல்

அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் சில தனியார் பள்ளிகளில் தொடர்ச்சியாக வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவத்தில் தனி நபர் காரணமாகவும் மிரட்டல் விடுக்கப்பட்டிருக்கலாம் எனவும் ATS போலீசார் சந்தேகித்துள்ளனர்.

இதேபோன்று நான்கு வகைகளாக பிரித்து சைபர் கிரைம் போலீசார், சைபர் கிரைம் வல்லுநர்கள் ஆகியோருடன் இணைந்து தீவிரவாத தடுப்பு பிரிவு போலீசார் விசாரணையை துரிதிபடுத்தியுள்ளனர்.

Dark Web டெக்னாலஜி முறையில் வெடிகுண்டு மிரட்டல்!

குறிப்பாக, மிரட்டல் வந்த மெயில் ஐ.டி.கள் குறிப்பிட்ட மணி நேரங்களுக்குள் அல்லது குறிப்பிட்ட நாட்களுக்குள் மறையும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளதால் அது சார்ந்த தரவுகளை சைபர் கிரைம் வல்லுநருடன் இணைந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இவை அனைத்தும் Dark Web டெக்னாலஜி முறையில் மர்ம நபர்கள் தொடர் வெடிகுண்டு மிரட்டல் விடுத்து வருவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

சமீபத்தில் சென்னையைச் சேர்ந்த ஐ.டி பெண் ஊழியர் ரினே ஜோஸ்லிடா, ஒரு தலை காதலால் காதலனை பழிவாங்க நாடு முழுவதும் 12 மாநிலங்களில் 21 வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவத்தில் அகமதாபாத் சைபர் கிரைம் போலீசார் அவரை கைது செய்தனர். இந்த கைது சம்பவத்திற்கு பிறகே தமிழக போலீசார் வெடிகுண்டு மிரட்டல் விவகாரத்தை மீண்டும் தூசு தட்ட ஆரம்பித்துள்ளனர்.

12 மாநிலங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த சென்னை பெண்

குறிப்பாக, கைது செய்யப்பட்ட பெண்ணின் மின்னணு சாதனங்கள், சமூக வலைதள கணக்குகள், வங்கி கணக்கு ஆவணங்கள் உள்ளிட்ட தரவுகளை குஜராத் போலீசார் கைப்பற்றிய நிலையில், தமிழக தீவிரவாத தடுப்பு பிரிவு போலீசார் குஜராத் மாநிலத்துக்குச் அப்பெண் குறித்த அனைத்து தரவுகளையும் வாங்கியுள்ளனர்.

சைபர் கிரைம் போலீசார், சைபர் வல்லுநர்கள் ஆகியோர் இணைந்து மர்ம நபர்களை தேடி வருவதாகவும், விரைவில் வெடிகுண்டு மிரட்டல் விடுத்து வரும் நபர்கள் கைது செய்யப்படுவார்கள் எனவும் தீவிரவாத தடுப்புபிரிவு போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர்.