பள்ளிக்கரணை பகுதியில் பேனரை அகற்றும் பணியில் ஈடுபட்டிருந்த இளைஞர், தவறி விழுந்து படுகாயம் அடைந்தார்.
சென்னையை அடுத்த பள்ளிக்கரணையில் சாலையின் நடுவே வைக்கப்பட்டிருந்த பேனர் மோதி இளம் பெண் சுபஸ்ரீ விபத்துக்குள்ளாகி உயிரிழந்த சம்பவம் தமிழகத்தையே சோகத்தில் ஆழ்த்தியது. இதனையடுத்து, அனைத்து அரசியல் கட்சிகளும் விதிகளை மீறி பேனர்களை வைக்கக் கூடாது என்று அறிக்கை வெளியிட்டனர். சட்டவிரோதமாக வைக்கப்பட்டிருக்கும் பேனர்களை அகற்றும் பணியில் மாநகராட்சியும் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.
இந்நிலையில், பள்ளிக்கரணை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றின் முன்பாக வைக்கப்பட்டிருந்த பேனரை அகற்றும் பணி நேற்று நடைபெற்றுள்ளது. 50 அடி உயரமுள்ள அந்த பேனரை அகற்றிக் கொண்டிருக்கும் போது, திடீரென அது சரிந்து கீழே வீழ்ந்தது. அப்போது, பேனரை அகற்றும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த ராஜேஷ்(30) என்பவர் நிலைதடுமாறி கீழே விழுந்தார். அவரது கை மற்றும் கால்களில் காயம் ஏற்பட்டது. உடனடியாக அவர் அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
சுபஸ்ரீ விபத்துக்குள்ளான பகுதியில் இருந்து சுமார் 100 மீட்டர் தொலைவிலே இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது. இதுகுறித்து பள்ளிக்கரணை போலீசார் கூறுகையில், “தனியார் மருத்துவமனையில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அபாய கட்டத்தை அவர் தாண்டிவிட்டதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர். இதுவரை யாரும் புகார் அளிக்கவில்லை” என்றனர்.