தாய்க்கு அருகே தூங்கிக் கொண்டிருந்த இரண்டரை வயது குழந்தை கிணற்றில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் கோவையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஈரோடு மாவட்டம் செங்கப்பள்ளியைச் சேர்ந்தவர் கனகராஜ். இவர் கோவை தனலட்சுமி நகரில், மனைவி காஞ்சனா மற்றும் இரண்டரை வயது பெண் குழந்தை அரும்பதாவுடன் வாடகை வீட்டில் வசித்து வருகிறார். கனகராஜ் ஜே.சி.பி. இயந்திரங்களை வாடகைக்கு விடும் தொழில் செய்து வருகிறார். காஞ்சனாவின் அம்மா பேச்சியம்மாள் வீடும் இவர்கள் வசிக்கும் பகுதியில்தான் உள்ளது. தனியாக வசிக்கும் பேச்சியம்மாள் பசுமாடுகளை வைத்து பால் வியாபாரம் செய்து வருகிறார்.
நேற்று சொந்த ஊருக்குச் சென்ற கனகராஜ், மனைவி காஞ்சனா மற்றும் குழந்தையை பாட்டி பேச்சியம்மாள் வீட்டில் விட்டு சென்றிருக்கிறார். இன்று காலை பேச்சியம்மாள் தூங்கி எழுந்து பார்த்தபோது பக்கத்தில் படுத்திருந்த குழந்தை அரும்பதாவை காணவில்லை. உடனே கனகராஜிற்கு தகவல் கொடுத்துள்ளார். உடனே அக்கம்பக்கத்தில் இருப்பவர்களும் குழந்தையை பல இடங்களில் தேடியுள்ளனர். ஆனால் குழந்தை கிடைக்கவில்லை.
இதனிடையே பேச்சியம்மாளின் வீட்டிற்கு எதிரே கருவேலங்காடு உள்ளது. அங்கு சென்று பார்த்தபோது அங்குள்ள கிணற்றில் அரும்பதா பிணமாக மிதந்து கிடந்துள்ளார். இருப்பினும் குழந்தை உயிரோடு இருக்குமோ என்ற சந்தேகத்தில் கே.எம்.சி.எச். மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் நீரில் மூழ்கி ஏற்கெனவே குழந்தை இறந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர்.
இதுகுறித்து பீளமேடு போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த துணை ஆணையர் பாலாஜி சரவணன், விசாரணை மேற்கொண்டு வருகிறார். ஆள் அரவமற்ற அடர்ந்த கருவேலங்காட்டிற்குள் குழந்தை தனியாக செல்ல வாய்ப்பு இல்லை என்பதால் நன்கு அறிந்தவர்களே குழந்தையை கடத்தி கொலை செய்திருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. குடும்ப பிரச்சனை காரணமாக கொலை நடந்ததா அல்லது வேறு என்ன காரணத்திற்காக குழந்தை கொலை செய்யப்பட்டது என்ற கோணங்களில் பீளமேடு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.