3 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை file photo
தமிழ்நாடு

கடலூர்| 3 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை.. மருத்துவமனையில் அனுமதி!

கடலூரில் 3 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

PT WEB

கடலூரில் 3 வயது சிறுமி மீது பாலியல் தொல்லை நடந்தது தொடர்பாக முதுநகர் போலீசார் Pocso சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். முதல்கட்ட விசாரணையில் 17 வயது சிறுவன் சம்பந்தப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

கடலூரில் 3 வயது சிறுமிக்கு நடந்த கொடூர சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாதிக்கப்பட்ட சிறுமியின் தாய் பஜ்ஜி கடை நடத்தி வருவதால் தினமும் காலையில் குழந்தையை பால்வாடிக்கு அனுப்பிவிட்டு கடைக்கு சென்று விடுவது வழக்கம். அதன் பிறகு குழந்தை வீட்டின் அருகே உள்ள ஒருவரது வீட்டில் இருப்பது வழக்கம் என கூறப்படுகிறது. இந்நிலையில்தான் இந்த பாலியல் கொடூர சம்பவம் அரங்கேறியுள்ளது.

பாதிக்கப்பட்ட சிறுமி தற்போது கடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். சிறுமியை பார்க்க வேண்டும் என உறவினர்கள் கூட்டமாக மருத்துவமனைக்குள் நுழைய முயன்றபோது, கூட்டமாக வரக்கூடாது என காவல்துறையினர் தடுத்ததால் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

பாலியல் வன்கொடுமை

மருத்துவமனையில் நோயாளிகள் இருப்பதால் கூட்டமாக யாரும் நுழையக்கூடாது, ரத்த சொந்தங்களில் பெண்களாக இருந்தால் மட்டும் உள்ளே சென்று பார்க்கலாம் என காவல்துறை தெரிவித்தது. இதனால் நள்ளிரவில் கடலூர் அரசு மருத்துவமனையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. நீண்ட நேர வாக்குவாதத்திற்கு பிறகு உறவினர்கள் கலைந்து சென்றனர்.

இச்சம்பவம் குறித்து முதுநகர் போலீசார் Pocso வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முதல்கட்ட விசாரணையில் 17 வயது சிறுவன் இச்செயலில் ஈடுபட்டதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில், சம்பந்தப்பட்ட நபரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.