கேரளாவில் 3 வயது மகனை அடித்துக் கொலை புகாரில் தாய் கைது செய்யப்பட்டுள்ளார்.
கேரளாவில் 3 வயது சிறுவன் குமார் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) மருத்துவமனையில் பரிதாபமாக உயிரிழந்த நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக சிறுவனின் தாய் கைது செய்யப்பட்டுள்ளார். சிறுவன் குமாரின் தந்தை மேற்குவங்கத்தை சேர்ந்தவர். தாய் ஜார்க்கண்டை சேர்ந்தவர். இவர்கள் கடந்த சில வாரங்களாக கேரள மாநிலம் ஆலுவா பகுதியில் வசித்து வந்தனர். இதனிடையே கடந்த புதன்கிழமை, தலையில் பலத்த காயத்துடன் சிறுவன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இதனையடுத்து சிறுவனுக்கு தொடர்ந்து மருத்துவ சிகிச்சைகளும், அறுவை சிகிச்சையும் மேற்கொள்ளப்பட்டது. இருப்பினும் சிகிச்சை பலனின்றி கோமா நிலைக்கு சென்ற சிறுவன், நேற்று பரிதாபமாக உயிரிழந்தார்.
இதனிடையே சிறுவனின் உடலில் தீக்காயம் உள்பட பல காயங்கள் இருந்ததால் சந்தேகத்தின் அடிப்படையில் பெற்றோரிடம் விசாரணை நடத்தப்பட்டது. அப்போது சிறுவனை தாக்கியதை தாய் ஒப்புக்கொண்டதாக தெரிகிறது. அத்துடன் சப்பாத்தி கட்டையால் சிறுவனை அடித்ததாக அவர் கூறியதாகவும் தெரிகிறது. இதனையடுத்து அப்பெண்ணை கைது செய்த போலீசார், அவர் மீது வழக்குப்பதிவு செய்த தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தந்தையிடமும் விசாரணை மேற்கொள்ளப்பட்ட நிலையில் அவர் கைது செய்யப்படவில்லை.