செய்தியாளர்: ஆர்.ரவி
ஆத்தூர் அருகே அரசு பள்ளி மாணவிக்கு பதினோராம் வகுப்பு மாணவர்கள் பாலியல் தொந்தரவு விவகாரத்தில் தகவலை மறைத்ததாக தலைமை ஆசிரியர் உட்பட மூன்று பேர் கைது
சேலம் மாவட்டத்தில் இயங்கி வருகிறது இருபாலருக்கான அரசுப்பள்ளி ஒன்று. இங்கு கடந்த ஜனவரி 22 ஆம் தேதி மாலை, 7 ஆம் வகுப்பு படிக்கும் மாணவிக்கு 11 ஆம் வகுப்பு பயிலும் மூன்று மாணவர்கள் பாலியல் தொல்லை கொடுத்துள்ளனர்.. இந்த சம்பவம் குறித்து சம்பந்தப்பட்ட மாணவி தனது பெற்றோரிடத்தில் தெரிவிக்க, மாணவியின் பெற்றோர் குழந்தைகள் உதவி எண்ணான 1098 ல் புகார் அளித்துள்ளனர்.
இந்நிலையில், ஆத்தூர் அனைத்து மகளிர் காவல்துறையினர் சம்பந்தப்பட்ட மாணவர்கள் மூன்று பேர் மீது போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மாணவர்கள் மூவரும் கூர்நோக்கு இல்லத்தில் ஒப்படைக்கப்பட்ட நிலையில் பள்ளியில் நடைபெற்ற சம்பவம் தொடர்பாக தகவலை மறைத்ததாக தலைமை ஆசிரியர் முத்துராமன், ஆசிரியர் ராஜேந்திரன், ஆசிரியை பானுப்பிரியா ஆகிய மூவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் மீது ஆத்தூர் அனைத்து மகளிர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.