தமிழ்நாடு

அதிமுகவில் 3-வதாக ஒரு அணியா?

Rasus

நாளுக்கு நாள் பல்வேறு குழப்பங்களை சந்தித்து வரும் அதிமுகவில் 3-வதாக ஒரு அணி உருவாகியுள்ளதா என சந்தேகம் எழுந்துள்ளது.

அதிமுக-வின் இரு அணிகளும் அதாவது ஓ.பன்னீர்செல்வம் அணியும், முதலமைச்சர் பழனிசாமி அணியும் இணைவது குறித்து பேசி வருகிறார்கள். சசிகலா, டிடிவி தினகரன் குடும்பத்தை விலக்கி வைத்தால்தான் பேச்சுவார்த்தை என ஓபிஎஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. பேச்சுவார்த்தைக்காக முதலமைச்சர் பழனிசாமி தரப்பில் இருந்தும் டிடிவி தினகரன் கட்சியிலிருந்து ஒதுக்கப்பட்டுவிட்டார் என சொல்லப்பட்டது. தினகரனும் ஒதுங்குகிறேன் என்று சொல்லிவிட்டார். சகிசிகலாவின் பேனர்களும் அதிமுகவின் தலைமை அலுவலகத்திலிருந்து அகற்றப்பட்டது. ஆனாலும் இணைப்புப் பேச்சுவார்த்தை துவங்கவில்லை. இரு அணிகளிலும் இணைப்பு குறித்துப் பேச குழுக்கள் அமைக்கப்பட்டாலும், அவர்கள் அமர்ந்து பேச இன்னும் நேரம் வாய்க்கவில்லை. டிடிவி தினகரனும் சசிகலாவும் கட்சியிலிருந்து முறைப்படி பதவி விலகவில்லை என்பதுதான் இந்தப் பேச்சுவார்த்தை இன்னும் தொடங்காததற்குக் காரணம் என்று கூறப்படுகிறது.

இந்நிலையில் சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய நாஞ்சில் சம்பத், டிடிவி தினகரனுக்கு 87 எம்எல்ஏ-க்கள் இருப்பதாக கூறியுள்ளார். அதிமுகவை சசிகலா தோளில் சுமந்தார் என்றும், அவரது பேனரை அகற்றியது அநீதி என்றும் பொதுச் செயலாளரின் கையெழுத்து இல்லாமல் கட்சியில் யாரும் எதுவும் செய்ய முடியாது என்றும் நாஞ்சில் சம்பத் கூறினார். அப்படியென்றால் ஓபிஎஸ், முதலமைச்சர் பழனிசாமி தவிர டிடிவி தினகரன் அணி என மூன்றாக அதிமுக பிரிந்துள்ளதா என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது.