சென்னை சேப்பாக்கத்தில் உள்ள கலைவாணர் அரங்கில் சாகித்திய அகாதெமி மற்றும் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம் - சிறப்பு நிலைத் தமிழ்த்துறை இணைந்து நடத்திய, கலைஞர் நூற்றாண்டுக் கருத்தரங்கை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
இன்று காலை நடைபெற்ற கருத்தரங்கில் பங்கேற்க மாணவர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில், பல்வேறு கல்லூரி மாணவர்கள் பங்கேற்றனர்.
இந்நிலையில் நிகழ்ச்சியில் பங்கேற்றவர்களை வீடியோ எடுக்கும் போது, முதல்வர் மு.க ஸ்டாலின் நிகழ்ச்சி அரங்குக்கு வருவதற்கு சில நிமிடங்கள் முன்னதாக மூன்று மாணவர்கள் த.வெ.க கட்சித் தலைவர் விஜய் முகம் பொறிக்கப்பட்ட கர்ச்சீஃப் எடுத்து அசைத்துள்ளனர்.
இதனால், அங்கு குழுமியிருந்த திமுக தொண்டர்களுக்குள் சலசலப்பு ஏற்பட்டது.
இதனையடுத்து போலீசார் மூவரையும் பிடிக்க முற்பட, ஒருவர் தப்பி ஓடியுள்ளார். மற்ற இருவரை திருவல்லிக்கேணி போலீசார் காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணையில் ஈடுபட்டனர்.
விசாரணையின் போது தப்பியோடிய மாணவர் நியூ கல்லூரி- தமிழ் 3ம் ஆண்டு படித்து வருவதும், அவர் 3 மாதங்களுக்கு முன்பு த.வெ.க கட்சியில் உறுப்பினராக சேர்ந்துள்ளதும் தெரியவந்துள்ளது.
இன்று காலை கருத்தரங்கில் கர்ச்சீஃப் காட்டிவிட்டு அருகில் இருந்த நண்பர்கள் கையில் கர்ச்சீஃபை கொடுத்துவிட்டு அம்மாணவர் தப்பிச் சென்றதும் தெரியவந்தது. பிடிக்கப்பட்ட மூவரிடமும் விசாரணை நடத்தி அனுப்பி வைக்கவிருப்பதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.