தமிழ்நாடு

பொது பாதையை ஆக்கிரமித்து 3 மாடி கட்டடம்- மதுரை துணை மேயர் மீது புகார்!

webteam

பொது பாதையை ஆக்கிரமித்து மூன்று மாடி கட்டிடம் கட்டியதாக மதுரை துணை மேயர் மீது உள்ளாட்சி அமைப்புகள் நடுவன் மன்றத்தில் புகாரளித்துள்ள நிலையில், ஆக்கிரமிப்பு செய்த பாதையை 15 நாட்களில் ஒப்படைக்கும் படி நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

மதுரை விளாங்குடி செம்பருத்தி நகரை சேர்ந்தவர் சிவாஜி. இவர் உள்ளாட்சிகள் அமைப்புகள் நடுவர் மன்றத்தில் புகார் மனு ஒன்றை அளித்துள்ளார். அதில் கூறியிருப்பதாவது, மதுரை ஜெய்ஹிந்த்புரம், எம்.ஜி.ஆர் கிழக்குத் தெருவில் 20 அடி அகல பொதுசாலையை 80-ஆம் வார்டு கவுன்சிலரும், மாநகராட்சி துணை மேயருமான நாகராஜன் ஆக்கிரமிப்பு செய்து வீடு கட்டிள்ளார். மேலும் பொது பாதையை ஆக்கிரமித்து செய்து வீட்டை கட்டி உள்ளதால் 20 அடி அகலப்பாதை இப்போது 7 அடி அகல பாதையாய் குறைந்துள்ளது. மாநகராட்சி அலுவலர்களிடம் இது பற்றிய புகார் அளித்தபோது அங்கு ஆக்கிரமிப்பு ஏதுமில்லை, பத்திரத்தின் படி தான் இருக்கிறது என தெரிவித்துள்ளனர். ஆனால் அவர்கள் காட்டிய பத்திரத்தில் மேற்கண்ட இடத்தில் 20 அடி பாதை என குறிப்பிடப்பட்டிருந்தது. மேலும் 300 சதுர அடி இடம் கொண்ட இடத்தில் அங்கு மூன்று மாடி கட்டிடங்கள் விதிக்கு முரணாக கட்டப்பட்டுள்ளன. அதனால் விதிமீறி பொது பாதையை ஆக்கிரமிப்பு செய்ததை தடுத்து நிறுத்த தவறிய மாநகராட்சி ஆணையர் மற்றும் உதவி ஆணையர் மீது நடவடிக்கை எடுத்திட உத்தரவிடுமாறு வழக்கு தொடர்ந்தார்.

மேலும் மாநகராட்சியில் துணை மேயர் பதவியில் இருந்து கொண்டு சட்டத்திற்கு புறம்பாக மாநகராட்சிக்கு செந்தமான ரோட்டை ஆக்கிரமிப்பு செய்து, பொது மக்களுக்கு இடைஞ்சல் ஏற்படுத்தி வரும் நாகராஜன் மீது நடவடிக்கை எடுத்து, மேற்படி ஆக்கிரமிப்புகளை அகற்றி பொதுமக்கள் பயன்பாட்டுக்காக புதுப்பாதையை ஒப்படைக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

இதைத்தொடர்ந்து மாநகராட்சியின் உதவி ஆணையர், உள்ளாட்சி அமைப்புகள் நடுவர் மன்றத்தில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டதாக கூறப்படும் பொதுப்பாதை தற்போது வரை தனிநபர் பெயரில் பட்டா இடமாக பதிவு செய்யப்படாமல் இருக்கிறது. இதை தொடர்ந்து இதன் உரிமையாளர் செல்வராணி என்பவரிடம் உரிய விளக்கம் அளிக்கவும் மற்றும் பொது பாதையை ஒப்படைப்புக்குண்டான ஆவணங்கள் சமர்ப்பிக்கும் படியும் கடிதம் அனுப்பப்பட்டு இருக்கிறது என தெரிவித்தார்.

இதை தொடர்ந்து உள்ளாட்சி அமைப்பில் அதிகாரிகள் சமர்ப்பித்துள்ள அறிக்கையின்படி புகார்தாரர் கட்டியுள்ள இடத்தில் பாதை ஆக்கிரமிப்பு உள்ளது தெள்ளத் தெளிவாக தெரிகிறது. மேலும் ஆக்கிரமிப்பை அகற்ற கள ஆய்வு செய்யாமல் அதிகாரிகள் கடமை தவறியது மட்டுமல்லாமல், உரிய நேரத்தில் விதிமுறைகளின் படி நடவடிக்கை எடுக்காமலும் விதி மீறி அனுமதியின்றி ஆக்கிரமிப்பு செய்தவருக்கு மாநகராட்சி அலுவலர்கள் துணை போய் இருப்பது, இந்த அறிக்கையின் வாயிலாக தெரிய வந்துள்ளது.

மேலும் சம்பந்தப்பட்ட அலுவலர்கள் மீது உரிய ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ள நடுவர் மன்றம் மதுரை மாநகராட்சி ஆணையருக்கு அறிவுறுத்தி ஆணையிட்டுள்ளது. மேலும் 3 மாத காலத்தில் இதனை முடித்து அறிக்கை அனுப்ப மாநகர ஆணையருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்த விவகாரம் தொடர்பாக மதுரை மாநகராட்சி நிர்வாகத்தை தொடர்பு கொண்டு கேட்ட போது, ஆக்கிரமிப்பு உறுதி செய்யப்பட்ட இடம் மாநகராட்சியின் சொத்து மதிப்பில் தற்போது வரை இணைக்கப்படவில்லை. சம்பந்தப்பட்ட அந்த இடம் மாநகராட்சியின் சொத்தில் இணைப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன்படி மாநகராட்சியில் சொத்தில் இணைக்கப்பட்ட பிறகு பொதுமக்களின் பாதை பயன்பாட்டிற்காக அந்த கட்டடம் இடிக்கப்படுமா அல்லது மாற்று வழி யோசிக்கப்படுமா என்பது குறித்து முடிவெடுக்கப்படும். மேலும் இது தொடர்பாக மாநகராட்சி அதிகாரிகள் ஊழியர்கள் என யாரெல்லாம் சம்பந்தம் இருக்கிறது என்பது தொடர்பான விசாரணையும் முறையாக நடைபெற்று வருவதாக தெரிவித்தனர்.

மேலும் பொது பாதை தொடர்பாக உரிய நபரிடம் விளக்கம் மற்றும் பாதை ஒப்படைப்பு ஆவணங்களை 15 நாட்களுக்குள் உதவி ஆணையர் முன்னிலையில் சமர்ப்பிக்கும் படி மாநகராட்சி நிர்வாகம் நோட்டீஸ் வழங்கி உள்ளது.