கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் அடுத்த ஜெகதேவி அருகே உள்ள சின்னபனகமுட்லு கிராமத்தைச் சேர்ந்த சங்கர் என்பவரது மகன் சரத் என்கின்ற சரத்குமார். அதே கிராமத்தைச் சேர்ந்த அண்ணாமலை என்பவரது மகன் ஹரிஷ் மற்றும் நடேசன் என்பவரது மகன் நாகன். இவர்கள் மூவரும் ஊத்தங்கரையில் உள்ள சரத்குமாரின் உறவினர் ஒருவரது துக்க நிகழ்ச்சிக்கு சென்றுள்ளனர். மீண்டும் சின்னபனமுட்லு கிராமத்திற்கு வீட்டிற்கு இருசக்கர வாகனத்தில் மூவரும் வந்து கொண்டிருந்த பொழுது, ஜெகதேவி பேருந்து நிலையம் அருகே பின்னால் வேகமாக வந்த அரசுப் பேருந்து மோதி விபத்து ஏற்பட்டது.
இந்த விபத்தில் மூவரும் தூக்கி வீசப்பட்ட நிலையில், சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இந்நிலையில் தகவல் அறிந்து அங்கு வந்த பர்கூர் போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், விபத்து ஏற்பட்ட இடத்தில் கிருஷ்ணகிரி எஸ்.பி.தங்கதுரை மற்றும் பர்கூர் டிஎஸ்பி முத்துகிருஷ்ணன் ஆகியோர் விசாரணை மேற்கொண்டனர். ஒரே கிராமத்தில் மூன்று பேர் உயிரிழந்த சம்பவம் கிராமத்தினரிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.