புதுச்சேரியில் ரவுடிகள் 3 பேர் வெடிகுண்டு வீசியும் கத்தியால் வெட்டப்பட்டும் கொலை செய்யப்பட்டனர்.
புதுச்சேரி சண்முகாபுரத்தை சேர்ந்த ஜெரால்டு, முத்திரை பாளையத்தைசேர்ந்த சதீஷ், ஞானசேகர் ஆகியோர் மேட்டுப்பாளையம் அரசுதொழில்நுட்ப கல்லூரி எதிரில் இருக்கும் ராம்நகரில் பீரோ கம்பெனி ஒன்றில் தங்கி இருந்தனர். இதனையறிந்த 10 பேர் கொண்ட மர்ம கும்பல் அதிகாலை இரண்டு மணியளவில் வெடிகுண்டு வீசியும், அரிவாளால் வெட்டியும் 3 பேரையும் கொலை செய்தது. தகவலறிந்த மேட்டுப்பாளையம் போலீசார் மூவரின் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கதிர்காமம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
கடந்த 2014 ஆம் ஆண்டு புதுச்சேரி அருகே உள்ள பொறையூரில் பிரபல ரவுடி சுரேஷ் கொலை செய்யப்பட்டார். அதற்கு பழி தீர்க்கும் நோக்கில் சுரேஷின் ஆதரவாளர்கள் மூன்று ரவுடிகளையும் வெட்டிப் படுகொலை செய்திருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். கொலை நடந்த பகுதிகளில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ள காட்சிகளை வைத்து தனிப்படை போலீசார் கொலையாளிகளைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர். 6 பேரை பிடித்து விசாரணையும் நடத்தி வருகின்றனர். புதுச்சேரியில் தொடரும் வெடிகுண்டு கலாசாரம் மக்களை அச்சமடைய செய்துள்ளது.