விழுப்புரத்தில் ஏசி பயன்படுத்தியபோது ஏற்பட்ட மின்கசிவுக் காரணமாக 3 பேர் உயிரிழந்தனர்.
விழுப்புரம் மாவட்டம் காவேரிப்பாக்கத்தில் வசித்த ராஜ் என்பவர், தனது மனைவி கலைச்செல்வி, இளைய மகன் கவுதமனுடன் ஏசி பொருத்தப்பட்ட அறையில் இரவு உறங்கியுள்ளார். அப்போது, ஏசியில் மின்கசிவு ஏற்பட்டு, அதன் காரணமாக ரசாயன வாயு அறை முழுவதும் பரவியுள்ளது. அதில் மூச்சுத்திணறல் ஏற்பட்டு மூவரும் உயிரிழந்தனர்.
அதே வீட்டின் மற்றொரு அறையில் உறங்கிக் கொண்டிருந்த ராஜின் மூத்த மகன் கோவர்த்தன், அவரது மனைவி ஆகியோர் மூச்சுத்திணறால் பாதிக்கப்பட்டு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்த நிலையில், கவுதமன் ஏசியில் ஏற்பட்ட கசிவால் உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஏசியை முறையாக பராமரித்து, பயன்படுத்துவதே பாதுகாப்பானது என ஏசி மெக்கானிக்குகள் கூறுகின்றனர். ஏசியை பயன்படுத்தும் போது பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குறித்து ஏசி மெக்கானிக், நமது செய்தியாளர் பகிர்ந்துகொண்ட தகவல்களை பார்க்கலாம்.
1. 3 மாதங்களுக்கு ஒருமுறையை கட்டாயம் ஏ.சி.யை சர்வீஸ் செய்ய வேண்டும்
2. குளிர்நிலை 18 டிகிரி செல்சியஸி்ல் ஏ.சி.யை முதலில் இயக்க வேண்டும்
3. ஏ.சி.யின் குளிர்நிலையை படிப்படியாகவே குறைக்க வேண்டும்
4. அறையில் ஒரே நேரத்தில் ஏ.சி.யையும், மின்விசிறியையும் இயக்கக்கூடாது
5. மின்கசிவால் புகை வந்தால் பதட்டமடையாமல் ஜன்னல், கதவுகளை திறந்துவிட வேண்டும்
6. ஏ.சி.யில் ஏதேனும் பிரச்னை எனத் தோன்றினால் உடனடியாக மின் இணைப்பை துண்டிக்க வேண்டும்
7. தகுதிவாய்ந்த மெக்கானிக்குகளைக் கொண்டே ஏ.சி.யை பழுதுநீக்க வேண்டும்