திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் மண்ணெண்ணெய் கிடங்கு காசாளரிடம் 2,400 ரூபாய் லஞ்சம் வாங்கிய புகாரில் வட்ட வழங்கல் பெண் அலுவலர் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
பொங்கலூரில் குடிமைப்பொருள் வழங்கல் துறையின் கீழ் அமுதம் மண்ணெண்ணெய் கிடங்கு இயங்கி வருகிறது. இதில் காசாளராக வெங்கடேஷ் என்பவர் பணிபுரிந்து வருகிறார். இந்த மண்ணெண்ணெய் கிடங்கிலிருந்து மாதம்தோறும் 800 ரூபாய் வீதம் பல்லடம் வட்டாட்சியர் அலுவலகத்தில் இயங்கி வரும் வட்ட வழங்கல் துறையின் சார்பில் லஞ்சம் கேட்டு கட்டாயப்படுத்தியதாக கூறப்படுகிறது.
இதுதொடர்பாக லஞ்ச ஒழிப்புத்துறையில் புகார் கொடுத்துவிட்டு, கடந்த மூன்று மாதங்களுக்கும் சேர்த்து 2400 ரூபாயை வட்ட வழங்கல் அலுவலர் கிருஷ்ணவேணியிடம் வெங்கடேஷ் கொடுத்துள்ளார்.
அப்போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார், கிருஷ்ணவேணி மற்றும் உடந்தையாக இருந்த குடிமைப்பொருள் தனி வருவாய் அலுவலர் கோபிநாத், இடைத்தரகர் ஜெகன் ஆகியோரை கைது செய்தனர். கடந்த மாதம் பல்லடம் வட்டாட்சியர் அலுவலகத்தில் மண்டல துணை தாசில்தார் மேகநாதன் 10,000 ரூபாய் லஞ்சம் வாங்கிய வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில் 2வது முறையாக லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை நடத்தி மூவரை கைது செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.