அதிமுக முன்னாள் அமைச்சர் சுதர்சனம் கொலை வழக்கில் 3 பேருக்கு ஆயுள் தண்டனை web
தமிழ்நாடு

அதிமுக முன்னாள் அமைச்சர் சுதர்சனம் கொலை வழக்கு.. பவாரியா கொள்ளையர் 3 பேருக்கு ஆயுள் தண்டனை!

தமிழ்நாட்டையே உலுக்கிய அதிமுக முன்னாள் அமைச்சர் சுதர்சனம் கொலை வழக்கில் 3 பேருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது..

PT WEB

அதிமுக எம்எல்ஏ சுதர்சனத்தை கொலை செய்து நகைகளை கொள்ளையடித்து சென்ற பவாரியா கொள்ளையர்கள் 3 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து சென்னை கூடுதல் அமர்வு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

தமிழகத்தில் 1995ஆம் ஆண்டு முதல் 2005ஆம் ஆண்டு வரை பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து 20-க்கும் மேற்பட்ட கொள்ளை மற்றும் 14 கொலை சம்பவங்கள் நடைப்பெற்றது. இது காவல்துறைக்கு மிகப்பெரிய சவாலாக இருந்தது.

இந்நிலையில் கும்மிடிப்பூண்டி அதிமுக எம்எல்ஏவாகவும், அமைச்சராகவும் இருந்த சுதர்சனத்தின் வீட்டிற்கு புகுந்த கொள்ளையர்கள் சுதர்சனத்தை துப்பாக்கியால் சுட்டுக் கொன்று விட்டு, அவரது மனைவி மற்றும் மகன்களை கட்டிப்போட்டு தாக்கி, 62 சவரன் தங்க நகைகளை கொள்ளையடித்துச் சென்றனர்.

10 ஆண்டாக கொள்ளையடித்த பவாரியா கொள்ளையர்..

இந்த வழக்கில் காவல்துறை தீவிரமாக துப்பு துலக்கியபோது ஹரியாணா, ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த பவாரியா கொள்ளையர் தான் தமிழகத்தில் 10 ஆண்டுகளாக நடைப்பெற்ற தொடர் கொலை மற்றும் கொள்ளை சம்பவங்களுக்கு காரணம் என தெரிய வந்தது.

இதையடுத்து குற்றவாளிகளை வடமாநிலத்திற்கு பிடிக்க சென்றபோது பவாரியா கொள்ளையர் இருவரை தமிழக காவல்துறையினர் என்கவுன்ட்டர் செய்தனர். இந்த வழக்கில் 32 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு, ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்த ஓம் பிரகாஷ், அவரது சகோதரர் ஜெகதீஷ் உள்ளிட்ட 9 பேர் மட்டுமே கைது செய்யப்பட்டனர்.

இதில் கைது செய்யப்பட்ட ஓம்பிரகாஷ், பவாரியா உள்பட இருவர் சிறையிலேயே இறந்துவிட்டனர். மீதமுள்ள ஜெகதீஷ், ராகேஷ், அசோக் மற்றும் ஜெயில்தார் சிங் ஆகிய 4 பேருக்கு எதிரான வழக்கை சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள சென்னை கூடுதல் அமர்வு நீதிமன்ற நீதிபதி ஆப்ரஹாம் லிங்கன் விசாரித்து வந்தார். வழக்கில், 86 பேர் காவல் துறை சாட்சிகளாக விசாரிக்கப்பட்டனர்.

3 பேருக்கு ஆயுள் தண்டனை..

அனைத்து தரப்பு விசாரணையும் முடிந்த நிலையில், ஜெகதீஷ் உள்பட நான்கு பேருக்கு எதிரான இந்த வழக்கில் அவர்களில், ஜெகதீஷ், ராகேஷ், அசோக் ஆகிய 3 பேரை குற்றவாளிகள் என அறிவித்து சென்னை கூடுதல் அமர்வு நீதிமன்றம். கடந்த வாரம் தீர்ப்பளித்தது.

இன்று இந்த வழக்கில் தண்டனை விவரங்களை அறிவித்த நீதிபதி ஆபிரகாம் லிங்கன், குற்றங்கள் 3 பேருக்கு எதிராக நிரூபிக்கப்பட்டதாக கூறி குற்றவாளி ஜெகதீசுக்கு 4 ஆயுள் தண்டனையும், ரூ.40 ஆயிரம் அபராதமும், குற்றவாளி ராகேஷ்க்கு 5 ஆயுள் தண்டனை மற்றும் ரூ.50 ஆயிரம் அபராதமும், குற்றவாளி அசோக்கிற்கு 4 ஆயுள் தண்டனை மற்றும் ரூ.40 ஆயிரம் அபராதம் விதித்து உத்தரவிட்டார்.

மேலும் வழக்கில் பவாரியா கொள்ளையர்களுக்கு லாரி கொடுத்த உதவியதாக கைது செய்யப்பட்டிருந்த ஜெயில்தார் சிங் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படவில்லை எனக்குறி அவரை விடுதலை செய்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.