விழுப்புரம் அருகே பட்டியலின மக்களுக்கு கட்டுப்பாடு விதித்த வழக்கில் 3 பேரை வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
விழுப்புரம் மாவட்டம் செஞ்சியை அடுத்த ஏதாநெமிலி கிராமத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி பேனரை சேதப்படுத்தியது தொடர்பாக இரு பிரிவினரிடையே மோதல் ஏற்பட்டது. இதையடுத்து அக்கிராமத்திலுள்ள கடைகளில் பட்டியலின மக்களுக்கு மளிகை பொருட்கள், பால் உட்பட எவ்வித பொருட்களும் கொடுக்கக்கூடாது என கட்டுப்பாடு விதிக்கப்பட்டதாக தெரிகிறது.
இதையடுத்து ஏதாநெமிலி கிராமத்தை சேர்ந்த பிரகாஷ் என்பவர் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ கொடுத்த புகாரின் பேரில் 10 பேர் மீது கடந்த மாதம் செஞ்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வந்தனர்.
இந்நிலையில், வன்கொடுமை சட்டத்தின் கீழ் குற்றவாளிகளை கைது செய்யக் கோரி விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்த விழுப்புரம் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிக்குமார் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதையடுத்து இவ்வழக்கில் சம்மந்தப்பட்ட சுரேஷ், ஏழுமலை, பரசுராமன் ஆகிய 3 பேரை போலீசார் வன்கொடுமை சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.