தமிழ்நாடு

வேலை வாங்கித் தருவதாக ஆசை வார்த்தை.. சிறுமியை கடத்தி பாலியல் வன்கொடுமை செய்த 3 பேர்..!

வேலை வாங்கித் தருவதாக ஆசை வார்த்தை.. சிறுமியை கடத்தி பாலியல் வன்கொடுமை செய்த 3 பேர்..!

webteam

அதிக சம்பளத்துக்கு வேலை வாங்கித் தருவதாக ஆசை வார்த்தை காட்டி சிறுமியை காரில் கடத்தி பாலியல் வன்கொடுமை செய்த மூன்று பேரை போலீசார் போக்சோ சட்டப்பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.

விழுப்புரத்தைச் சேர்ந்தவர் 14 வயது சிறுமி. இவர் அடையாறு இந்திரா நகரில் உள்ள தனியார் நிறுவன ஊழியர் ஒருவரது வீட்டில் வேலை செய்து வந்தார்.இதனையடுத்து இவர் கடந்த மாதம் 8-ம் தேதியன்று அன்று வீட்டில் இருந்து காணாமல் போய்விட்டதாகச் சொல்லப்படுகிறது. இந்நிலையில் இது தொடர்பாக அடையாறு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. சிறுமி காணாமல் போனதாக வழக்குப்பதிவு செய்த போலீசார் சிறுமியை தேடி வந்தனர். ஆனால் சிறுமியை பல இடங்களில் தேடியும் சிறுமி கிடைக்கவில்லை. இதனையடுத்து சிறுமி புகைப்படத்துடன் கூடிய துண்டு பிரசுரங்களை ஆட்டோக்களில் விளம்பரபடுத்தி சிறுமியை தேடினர்.

இந்நிலையில் காணாமல்போன சிறுமி சென்னை, பாலவாக்கத்தில் உள்ள ஒரு தள்ளுவண்டி கடையில் வேலை செய்து வருவதாக ஆட்டோ டிரைவர் ஒருவர் அடையாறு போலீசுக்கு தகவல் தெரிவித்தார். இதனையடுத்து அங்கு விரைந்து சிறுமியை பத்திரமாக மீட்ட போலீசார் சிறுமியை அடையாறு அனைத்து மகளிர் காவல் நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்தினர். அப்போது சிறுமி அதிர்ச்சி தரும் வகையில் தகவல்களை வெளியிட்டார்.

காணாமல் போன சிறுமியுடன் அதே பகுதியைச் சேர்ந்த வாலிபர் ஒருவர் நட்பு ரீதியாக பழகியுள்ளார். அவர் சிறுமியிடம் மாதம் ரூ.10 ஆயிரம் சம்பளத்தில் வேலை வாங்கித்தருவதாக ஆசை வார்த்தைகளை கூறியுள்ளார். மேலும் வேலைக்காக இன்டர்வியூவுக்கு செல்ல வேண்டும் என்று கூறிய அந்த வாலிபர் சிறுமியை பேசி அடையாறில் இருந்து துரைப்பாக்கத்திற்கு ஆட்டோவில் கூட்டிச் சென்றுள்ளார். அதன் பின்னர் வழியில் அவரது நண்பரின் காரில் ஏறிய அவர்கள் கிழக்கு கடற்கரைச்சாலையில் உள்ள பீச்சிற்கு சென்றுள்ளனர். பீச்சிற்கு சென்ற அவர்களுடன் மற்றொரு வாலிபரும் இணைந்து கொண்டுள்ளார். அதன் பின்னர் இந்த மூவரும் இணைந்து சிறுமியை காருக்குள் வைத்து பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். அதன் பின்னர் சிறுமியை அங்கேயே காரில் இறக்கி விட்டுவிட்டு தப்பியோடி விட்டனர்.

இந்த தகவல்களை கேட்ட காவல்துறையினர் சிறுமியை சம்பவ இடங்களுக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தியுள்ளனர். மேலும் அங்குள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்த போலீசார், சிறுமியை கடத்திச் சென்ற காரின் பதிவெண்ணை கண்டறிந்தனர். அதன் பின்னர் நடத்திய விசாரணையில் அந்த கார் நீலாங்கரையைச் சேர்ந்த வினோத் என்பவருடையது என்பது தெரியவந்தது.

இதன் தொடர்ச்சியாக வினோத், மகாராஜா மற்றும் நீலாங்கரையைச் சேர்ந்த சதீஷ்குமார் ஆகிய மூவரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் சிறுமியிடம் நட்பாக பழகி அவரை தவறாக பயன்படுத்தியதாக சதீஷ்குமார் உள்பட மூவர் மீதும் போக்சோ சட்டப்பிரிவின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதனையடுத்து மூவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுத்திய போலீசார் அவர்களை சென்னை புழல் மத்திய சிறையில் அடைத்துள்ளனர்.