ஐஎஸ் அமைப்புடன் தொடர்பு வைத்திருந்ததாக கோவையில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், மேலும் மூன்று பேர் மீது சட்டவிரோத தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
கோவை உக்கடம் , போத்தனூர் , குனியமுத்தூர் உள்ளிட்ட ஏழு இடங்களில் நேற்றைய தினம் ஏழு மணிநேரம் சோதனை மேற்கொண்ட தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் அசாருதீன் என்பவரை கைது செய்தனர். மேலும், ஷேக் இதயத்துல்லா, இப்ராஹிம், அக்ரம் சிந்தா, சதாம் உசேன், அபுபக்கர் ஆகிய 5 பேரை, கொச்சியில் உள்ள என்.ஐ.ஏ. அலுவலகத்தில் ஆஜராக உத்தரவிட்டனர்.
இந்நிலையில் முகமது உசேன், ஷாஜகான், ஷேக் ஷபிபுல்லா ஆகிய மூவர் மீது சட்டவிரோத செயல்கள் தடுப்புச் சட்டத்தின் கீழ், போத்தனூர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். அவர்களின் வீடுகளில் சிறப்பு நுண்புலனாய்வு பிரிவினர் நேற்று சோதனை நடத்தியதை அடுத்து வழக்குப் பதியப்பட்டு உள்ளது. அவர்கள் மூன்று பேரிடமும் இருந்து 4 செல்போன்கள், மடிக்கணினி மற்றும் புத்தகங்களை கைப்பற்றிய சிறப்பு நுண்புலனாய்வு பிரிவினர், தொடர்ந்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இவர்கள் மூவரும், கைது செய்யப்பட்ட அசாருதீனுடன் தொடர்பில் இருந்தது தெரியவந்துள்ளது. மேலும், இலங்கை குண்டுவெடிப்பில் தொடர்புடையர்கள் உடன், மூன்று பேரும் சமூகவலைதளத்தில் தொடர்பில் இருந்ததும் கண்டறியப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.