தமிழ்நாடு

கோவை ஆணவக்கொலையில் மேலும் 3 பேர் கைது

கோவை ஆணவக்கொலையில் மேலும் 3 பேர் கைது

webteam

கோவை ஆணவக் கொலையில் மேலும் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் சீரங்கராயன் ஓடை பகுதியை சேர்ந்தவர் கனகராஜ். இவர் அதே பகுதியில் வேறு சமூகத்தைச் சேர்ந்த வர்ஷினி பிரியா என்ற பெண்ணை காதலித்து வந்துள்ளார். இந்தச் சூழலில் கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு வர்ஷினி பிரியா தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு கூறி கனகராஜின் வீட்டுக்கு சென்றுள்ளார். அப்போது கனகராஜின் குடும்பத்தார் இவர்கள் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்ததாக தெரிகிறது.

பின்னர் கனகராஜ், வர்ஷினி ப்ரியாவுடன் சேர்ந்து சீரங்கராயன் ஓடை பகுதியில் வாடகை வீட்டில் தனி குடும்பம் நடத்தினார். இதனால் ஆத்திரமடைந்த கனகராஜின் அண்ணன் வினோத் அவர்கள் இருக்கும் வீட்டிற்கு சென்று இருவரையும் அரிவாளால் சரமாரியாக வெட்டியுள்ளார். இந்தக் கொடூரத் தாக்குதலில் கனகராஜ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

மேலும் வர்ஷினி ப்ரியா உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்தார். கொலையில் ஈடுபட்டதாக வினோத்குமார் கடந்த 26ம் தேதி மேட்டுப்பாளையம் காவல் நிலையத்தில் சரணடைந்தார்

 இந்நிலையில் 3 நாட்களுக்கு மேலாக சிகிச்சைப் பெற்று வந்த வர்ஷினி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது உடலை வாங்க உறவினர்கள் மறுப்பு தெரிவித்து போராட்டம் நடத்தினர். பட்டியலின ஆணையத்தலைவர் பேச்சுவார்த்தை நடத்திய தையடுத்து பெண்ணின் உடல் அடக்கம் செய்யப்பட்டது. 

இதற்கிடையில், ஆணவக்கொலைக்கு உதவியதாக வினோத்தின் நண்பர்கள் சின்னராஜ், கந்தவேல், அய்யப்பன் ஆகியோரை காவல்துறையினர் கைது செய்து, நீதிமன்ற காவலில் சிறையிலடைத்தனர்.