நெல்லை  முகநூல்
தமிழ்நாடு

உடலை காட்டுப் பகுதியில் புதைத்த விவகாரத்தில் 3 சிறார் கைது! நெல்லையில் தொடரும் கொலைகள்!

நெல்லை டவுண் குருநாதன் கோயில் அருகே ஒருவர் கொலை செய்து புதைக்கப்பட்டு இருப்பதாக கிடைத்த தகவலின்படி, சம்பவ இடம் சென்ற காவல்துறையினர் கோயில் அருகே முட்புதரில் புதைக்கப்பட்டிருந்த உடலை கைப்பற்றினர்.

PT WEB

நெல்லை மாவட்டத்தில் இளைஞரை கொன்று உடலை காட்டுப் பகுதியில் புதைத்த விவகாரத்தில் 3 சிறார் கைது செய்யப்பட்டிருக்கும் சூழலில், நெல்லை மாவட்டத்தில் கடந்த 97 நாட்களில் மட்டும் 13 கொலைகள் நடந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நெல்லை டவுண் குருநாதன் கோயில் அருகே ஒருவர் கொலை செய்து புதைக்கப்பட்டு இருப்பதாக கிடைத்த தகவலின்படி, சம்பவ இடம் சென்ற காவல்துறையினர் கோயில் அருகே முட்புதரில் புதைக்கப்பட்டிருந்த உடலை கைப்பற்றினர்.

விசாரணையில் உயிரிழந்த நபர் நெல்லை டவுன் பகுதியைச் சேர்ந்த 20 வயதுடைய ஆறுமுகம் என்பதும், அவர் கட்டடத் தொழிலாளி என்பதும் தெரியவந்தது. கொலை தொடர்பாக 3 இளம்சிறார் உட்பட 4 பேரை பிடித்து தனி இடத்தில் வைத்து காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இந்தச் சூழலில், நெல்லை மாவட்டத்தில் கடந்த சில ஆண்டுகளாக அரங்கேறிய கொலையில் பெரும்பாலும் சிறாரே ஈடுபட்டிருப்பதும், கடந்த ஐந்து ஆண்டுகளில் கொலை குற்றச் செயல்களில் ஈடுபட்டதாக 60 சிறார் கைது செய்யப்பட்டுள்ளதும் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் புதிய தலைமுறை குழுவிற்கு கிடைத்த தகவலில் தெரியவந்துள்ளது.

முறையான கல்வி இல்லாததும், சிறாரை பெற்றோர் முறையாக கண்காணிக்காததுமே அதிகளவில் குற்றச்செயல்களில் ஈடுபடக் காரணம் என சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர். தென்மாவட்டங்களில் அதிகரித்து வரும் கொலைக்குற்றங்கள், அதில் சிறார் ஈடுபாட்டை தடுப்பது அரசின் தலையாய கடமை என்ற சூழலில், அரசு என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறது என்பது பொதுமக்களின் கேள்வியாக உள்ளது.