திருமுருகன் காந்தி குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட விவகாரம் குறித்து ஐ.நா.மனித உரிமைகள் ஆணையத்தில் 3 உறுப்பினர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
ஐநா சபை மனித உரிமைகளின் 35வது கவுன்சில் கூட்டத்தின் ஆரம்ப உரைகள் முடிந்தவுடன், அரசியல்சாரா அமைப்புகள் சார்பில் விவாதம் நடப்பது வழக்கம். இதன்படி இன்று நடைபெற்ற விவாதத்தில் இந்தியா சார்பில் இரண்டு முக்கிய விஷயங்கள் வைக்கப்பட்டது. அதில் முதலாவதாக காஷ்மீரில் நடக்கும் கொடூரமான தாக்குதல் குறித்து விவாதிக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து சென்னையில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் கூட்டம் நடத்தியது தொடர்பாக சமூக செயற்பாட்டாளர் திருமுருகன் காந்தி குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டது தொடர்பாக கண்டனம் தெரிவிக்கப்பட்டது. இதில் ஒரு நிமிட அவகாசத்தில் திருமுருகனுக்கு ஆதரவாக மூன்று உறுப்பினர்கள் இந்த பிரச்சனையை எழுப்பினர். கிரிமினல்கள், ரவுடிகள், பல வழக்குகள் உள்ளவர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்வது வழக்கமாக உள்ள நிலையில், சமூக செயற்பாட்டாளரான திருமுருகன் காந்தி இச்சட்டத்தில் கைது செய்யப்பட்டது கண்டிக்கத்தக்கது என்று கூட்டத்தில் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. மேலும் ஐ.நா.வில் இவ்விவகாரம் முறையிடப்பட்டுள்ளதால், திருமுருகன் காந்தியை குண்டர் சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்ட சென்னை மாநகர ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் இதுதொடர்பாக பதிலளிக்க வேண்டியது இருக்கும் என்றும் கூறப்படுகிறது.