தமிழ்நாடு

நெய்வேலி: விபத்தை ஏற்படுத்தியதால் ஆத்திரம் - 3 லாரிகளுக்கு தீ வைத்த பொதுமக்கள்

webteam

நெய்வேலி அனல் மின் நிலையத்திலிருந்து சாம்பல் ஏற்றிச் சென்ற லாரி மோதி ஒருவர் உயிரிழந்ததால், அப்பகுதி மக்கள் 3 லாரிகளுக்கு தீ வைத்தனர்.

என்எல்சி அனல் மின்நிலையத்திலிருந்து அரியலூர், பெரம்பலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள சிமென்ட் ஆலைகளுக்கு லாரிகளில் சாம்பல் ஏற்றிச் செல்வது வழக்கம். அந்த லாரிகள் அதிவேகமாக செல்வதாக மேலக்குப்பம் பகுதியைச் சேர்ந்த மக்கள் ஏற்கனவே குற்றம்சாட்டி வந்தனர். இந்நிலையில், மேலக்குப்பத்தைச் சேர்ந்த தொழிலாளி ஒருவர், நெய்வேலி அருகே இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது சாம்பல் ஏற்றிச் சென்ற லாரி மோதியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இதனால் ஆத்திரமடைந்த மேலக்குப்பம் பகுதி மக்கள், சாம்பல் ஏற்றிச் சென்ற 5 லாரிகளை அடித்து நொறுக்கியதோடு 3 லாரிகளுக்கு தீ வைத்தனர். தகவல் அறிந்து வந்த என்எல்சி தீயணைப்பு துறையினர் தீயை அணைத்தனர். இதுதொடர்பாக காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்தில் உயிரிழந்தவரின் உடலை எடுக்க விடாமல் உறவினர்கள், ஊர்மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.