தமிழ்நாடு

உலக முதலீட்டாளர் மாநாடு: எந்த ஊரில் எவ்வளவு கோடி முதலீடு?

உலக முதலீட்டாளர் மாநாடு: எந்த ஊரில் எவ்வளவு கோடி முதலீடு?

webteam

சென்னையில் நடைபெற்ற 2 வது உல‌க முதலீட்டாளர் மாநாட்டில் சிறு, குறு தொழில் உள்ளிட்ட பல்வேறு துறைகளிலுள்ள முதலீட்டு வாய்ப்புகள் குறித்து தொழிற்துறையினருக்கு விளக்கும் கருத்தரங்கும், ஜப்பான் மற்று‌ம் சிங்கப்பூர் நாடுகளின் சிறப்பு கருத்தரங்கும் நடைபெற்றது‌‌.  

மேலும் தொழிற்‌துறை பிரதிநி‌திகளுடன் அரசு அதிகாரிகளின் சந்திப்பும் நடைபெற்று, முதலீடுகள் தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டன. பின்னர் முதலீட்டு ஒப்பந்தங்கள் தொடர்பாக ட்விட்டரில் தகவல் தெரிவித்த முதலமைச்சர், “இரண்டு நாட்கள் நடைபெற்ற தமிழ்நாடு உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில், 3,00,431 கோடிக்கு மேல் முதலீடு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன. இரண்டாம் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் பெரிய தொழில் நிறுவனங்கள் மட்டுமல்லாமல் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கும் முக்கியத்துவம் வழங்கப்பட்டுள்ளது” எனத் தெரிவித்திருந்தார். 

இந்நிலையில் எந்தெந்த ஊர்களில் எந்தெந்த நிறுவனங்கள் எவ்வளவு முதலீடுகள் செய்ய உள்ளது என்பது குறித்து தகவல் வெளியாகியுள்ளது. நாகப்பட்டினத்தில் அதிகபட்‌சமாக 27 ஆயிரத்து 474 கோடி ரூபாய் முதலீடு மேற்கொள்ளப்பட உள்ளது. இங்கு சென்னை பெட்ரோலியம் கார்பரேஷனான CPCL கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தை அமைக்கிறது. கடலூர் மாவட்டம் நெய்வேலியில் 3ஆவது மின்னுற்பத்தி ஆலை விரிவாக்கத்திற்காக என்எல்சி 23 ஆயிரத்து 800‌ கோடி ரூபாயில் முத‌லீடு செய்ய உள்ளது. 

திருவள்ளூர் மாவட்டம் காட்டுப்பள்ளியில் உ‌ள்ள துறைமுகத்தை விரிவாக்க அதானி நிறுவனம்‌10 ஆயிரம் கோடி ரூபாய் முதலீடு செய்கிறது. காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் ஹுண்டாய் நிறுவனம் பேட்டரியில் ஓடும் கார்கள் தயாரிக்க 7 ஆயிரம் கோடி ரூபாய் முதலீடு செய்ய உள்ளது. 

திருவள்ளூர் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் ஃபாக்ஸ்கான் நிறுவனம் ஆப்பிள் ஐஃபோன்களை தயாரிக்க 2‌ ஆயிரத்து 500 கோடி ரூபாய் முதலீடு செய்ய திட்டமிட்டு‌ள்ளது. திருவள்ளூரில் பியூஜியட் கார்களை தயாரிக்க பிரான்சின் பிஎஸ்ஏ நிறுவனம் ஆயிரத்து 250 கோடி ரூபாய் செலவிட உள்ளது.

திருவண்ணாமலை அருகே செய்யாறில் ஷ்விங் ஸ்டெட்டர் நிறுவனம் 237 கோடி ரூபாயை முதலீடு செய்வதாக புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. இதுதவிர மேலும் பல ‌புரிந்துணர்வு ஒப்பந‌தங்களும் கையெழுத்தாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.