Accident pt desk
தமிழ்நாடு

திண்டுக்கல்: இருசக்கர வாகனத்தின் மீது லாரி மோதிய விபத்து - 2 கல்லூரி மாணவர்கள் உட்பட 3 பேர் பலி

திண்டுக்கல் அருகே இருசக்கர வாகனத்தின் மீது லாரி மோதிய விபத்தில் 2 பாலிடெக்னிக் கல்லூரி மாணவர்கள் உட்பட 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

PT WEB

செய்தியாளர்: காளிராஜன் த

திண்டுக்கல் மாவட்டம், கன்னிவாடி வனச்சரகத்தில் வனக்காப்பாளராக பணியாற்றி வந்தவர் ராமசாமி. இவரது உறவினரான அரவிந்த் பாண்டி (19) என்பவர் இவரது வீட்டில் தங்கி ஒட்டன்சத்திரம் அருகே உள்ள தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தார். அதே கல்லூரியில் சித்தரேவு பகுதியைச் சேர்ந்த அருண்பாண்டி (16) என்ற மாணவனும் படித்து வந்தார்.

Dindigul GH

இந்நிலையில், நேற்று மாலை அரவிந்த் பாண்டி மற்றும் அருண்பாண்டி ஆகிய இருவரையும், ராமசாமி தனது இருசக்கர வாகனத்தில் அழைத்துக் கொண்டு சித்தரேவு நோக்கி சென்றுள்ளார். அப்போது தேனியில் இருந்து செம்பட்டி நோக்கி சென்ற லாரி, இருசக்கர வாகனத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில், இருசக்கர வாகனத்தில் சென்ற 3 பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த செம்பட்டி காவல் துறையினர் உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து வழக்குப் பதிவு செய்த போலீசார், விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.