தமிழ்நாடு

கோவில்பட்டி: வேட்புமனு பரிசீலனையில் பரபரப்பு.. மயக்கமடைந்த தேர்தல் அலுவலர் - நடந்தது என்ன?

கலிலுல்லா

கோவில்பட்டி அருகே கையெழுத்து போலி என கூறி 3 திமுக வேட்பாளர் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன. இதனிடையே தேர்தல் அலுவலர் திடீரென மயக்கமடைந்த சம்பவம் நடந்துள்ளது.

தமிழகத்தில் வரும் 19ந்தேதி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெறுகிறது. இதற்காக கடந்த மாதம் 28ந்தேதி முதல் வேட்பு மனு தாக்கல் தொடங்கி நேற்று நிறைவு பெற்றது. இதையடுத்து இன்று வேட்புமனு தாக்கல் பரிசீலனை நடைபெற்றது. அந்த வகையில் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள கடம்பூர் பேரூராட்சியில் 12வார்டுகளுக்கு 33 பேர் மனுத்தாக்கல் செய்திருந்தனர். இன்றைக்கு வேட்புமனு பரிசீலனை நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் 1வது வார்டில் திமுக சார்பில் போட்டியிடும் ஜெயராஜ், 2வது வார்டில் திமுக சார்பில் போட்டியிடும் சண்முகலெட்சுமி, 11வது வார்டில் திமுக சார்பில் போட்டியிடும் சின்னத்துரை ஆகியோர் வேட்பு மனுக்களில் முன்மொழிந்தவர்கள் கையெழுத்து போலியாக இருப்பதாகவும், முன் மொழிந்தவர்கள் வெளியூரில் இருப்பதாகவும், அவர்கள் கையெழுத்தினை போலியாக போட்டுள்ளதாக கூறி மற்ற வேட்பாளர்கள் குற்றச்சாட்டு கூறியதை தொடர்ந்து மூன்று பேரின் வேட்பு மனு பரிசீலனையை தேர்தல் நடத்தும் அலுவலர் சுரேஷ் குமார் நிறுத்தி வைத்து இருந்தார்.

3 பேரின் மனுக்களை தள்ளுபடி செய்ய வேண்டும், அவர்கள் மீது காவல்துறை மூலமாக நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மற்ற வேட்பாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் 3 பேரும் வேட்பு மனுவில் முன்மொழிந்ததாக கூறப்படுவர்கள் நேரில் வந்து தங்களுடைய கையேழுத்து இல்லை, போலியாக போடப்பட்டுள்ளதாக தேர்தல் நடத்தும் அலுவலரிடம் புகார் அளித்தனர். இதையடுத்து 3 பேரின் மனுக்களும் தள்ளுபடி செய்யப்பட்டதாக அறிவிப்பு பலகையில் நோட்டீஸ் ஒட்டப்பட்டதை தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது.

தள்ளுபடி செய்யப்பட்ட 3 வேட்பாளர்கள் மற்றும் அவர்களது பிரதிநிதிகள் வேட்புமனு பரிசீலனைக்கு வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. திமுகவின் 3 வேட்பாளர்கள் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டதால் அவர்களை எதிர்த்து நின்ற 3 சுயேட்சை வேட்பாளர்கள் நாகராஜா, ராஜேஸ்வரி, சிவகுமார் ஆகியோர் போட்டி இல்லாமல் தேர்வாகும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதற்கிடையில் கடம்பூர் பேரூராட்சி செயல் அலுவலரும், தேர்தல் நடத்தும் அலுவலருமான சுரேஷ்குமார் வெளியே சென்று விட்டு காரில் அலுவலகம் வந்த போது அலுவலகம் முன்பு திடீரென மயங்கி கீழே விழுந்தார். போலீசார் அவரை மீட்டு காரில் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.