கன்னியாகுமரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் உள்ள கொரோனா வார்டில் இன்று ஒரே நாளில் 3 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம் ராஜாக்கமங்கலம் துறை மீனவ கிராமத்தை சேர்ந்தவர் மரியஜான். இவருக்கு வயது 66. இவர் கேரளாவில் மீன்பிடி தொழில் செய்து வந்த நிலையில் ஊர் திரும்பியுள்ளார். இதனால் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக அவர் வீட்டில் தனிமை படுத்தப்பட்டிருந்தார். இதைத்தொடர்ந்து அவருக்கு காய்ச்சல், இருமல் இருந்ததால் கன்னியாகுமரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் தனிமைபடுத்தப்பட்ட கொரோனா வார்டில் அனுமதிக்கப்பட்டு மருத்துவ பரிசோதனை நடைபெற்று வந்தது.
இந்நிலையில், அவர் இன்று திடீரென உயிரிழந்தார். அவரது சளி மற்றும் ரத்த மாதிரியின் பரிசோதனை முடிவில் கொரோனா இல்லை என உறுதியாகி உள்ளது. அவரது மகன் சவுதி அரேபியாவில் பணியாற்றி கடந்த 13 ம் தேதி ஊர் திரும்பிய நிலையில் அவரும் வீட்டில் தனிமைபடுத்தப்பட்டுள்ளார்.
இவரைத்தொடர்ந்து முட்டம் பகுதியை சேர்ந்த 2 வயது ஆண் குழந்தை மற்றும் திருவட்டர் பகுதியை சேர்ந்த ராஜேஷ் 24 ஆகியோர் உயிரிழந்துள்ளனர். இவர்களின் பரிசோதனை முடிவுகள் இன்னும் வரவில்லை என கூறப்படுகிறது.
கன்னியாகுமரியில் தற்போது உயிரிழந்துள்ள 3 பேர் மற்றும் ஏற்கனவே உயிரிழந்தவர்கள் என 6 பேருமே நுரையீரல் நோயால் பாதிக்கப்பட்டவர்கள். இவர்கள் யாரும் வெளிநாடு மற்றும் அருகில் உள்ள கேரளாவிற்கு கூட செல்லாதவர்கள். கேரளா சென்று வந்தவர்களைக் கூட சந்திக்காதவர்கள். முதன் முதலில் அங்கு உயிரிழந்த பெண்மணியின் மாதிரிகள் எடுக்கப்பட்டதில் அவருக்கு கொரோனா இல்லை என்றே முடிவுகள் கிடைத்தன. தற்போது உயிரிழந்துள்ளவர்களுக்கும் மாதிரிகள் எடுக்கப்பட்டு ஆய்விற்கு அனுப்பப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.