தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று ஒரேநாளில் டெங்கு மற்றும் வைரஸ் காய்ச்சலுக்கு 3 பேர் பலியாகி உள்ளனர். கடந்த வருடம் இதே நாளில் பிறந்த குழந்தை இந்தாண்டு இதே தினத்தில் அதுவும் பிறந்த மருத்துவமனையிலே இறந்த சோக சம்பவமும் அரங்கேறியுள்ளது.
திருப்பூர் போயம்பாளையத்தை சேர்ந்த விஸ்வநாதன், சிவபார்வதி தம்பதியின் 2 வயது மகள் தியாஸ்ரீக்கு கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் காய்ச்சல் இருந்தது. தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த தியாஸ்ரீ மேல்சிகிச்சைக்காக கோவை மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி குழந்தை தியாஸ்ரீ இன்று காலை உயிரிழந்தாள்.
திண்டுக்கல் மாவட்டத்தில் டெங்கு பாதிப்பு அதிகம் உள்ள நிலையில், கணேசபுரத்தைச் சேர்ந்த அகிலன் என்ற ஒரு வயது ஆண் குழந்தை டெங்குவுக்கு இன்று உயிரிழந்தான். திண்டுக்கல் அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்த அகிலன், கடந்த ஆண்டு இதேநாளில் இதே மருத்துவமனையில் தான் பிறந்தான். பிறந்தநாளில் பிறந்த இடத்திலேயே குழந்தை உயிரிழந்த சம்பவம் அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
புதுச்சேரியை அடுத்த கனகசெட்டிகுளம் பகுதியில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் டெக்னீஷியனாக பணிபுரிந்துவந்த இந்துமதி என்ற பெண், அதே மருத்துவமனையில் டெங்கு காய்ச்சலுக்காக சிகிச்சைப்பெற்று வந்தார். ஆனால், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இந்துமதிக்கு சில மாதங்களுக்கு முன் திருமணம் நிச்சயிக்கப்பட்டு விரைவில் திருமணம் நடைபெற இருந்தது.