தமிழ்நாடு

“3 நாளைக்கு ஒருமுறை ஒரு பாட்டில்தான்” : மதுபானம் வாங்க அதிரடி நிபந்தனைகள்..!

“3 நாளைக்கு ஒருமுறை ஒரு பாட்டில்தான்” : மதுபானம் வாங்க அதிரடி நிபந்தனைகள்..!

webteam

தமிழகத்தில் டாஸ்மாக் மதுபான கடைகளில் மது விற்பனை செய்ய பல்வேறு நிபந்தனைகளை உயர்நீதிமன்றம் விதித்துள்ளது.

தமிழகத்தில் மே 7ஆம் தேதி முதல் மதுபான கடைகள் திறக்கப்படும் என அரசு அறிவித்தது. இந்த அறிவிப்பை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை இன்று விசாரித்த நீதிமன்றம், டாஸ்மாக் கடைகளை திறக்க தடை விதிக்க மறுப்பு தெரிவித்தது. அதேசமயம் பல்வேறு நிபந்தனைகளையும் விதித்தது.

மதுபானக் கடைகளுக்கான நிபந்தனை :

  • 3 நாளைக்கு ஒருமுறை ஒருவருக்கு ஒரு பாட்டில் மட்டுமே விற்க வேண்டும்.
  • வாங்குபவரின் பெயர், முகவரி, ஆதார் எண்ணுடன் ரசீது தரப்பட வேண்டும்.
  • ஆன்லைன் மூலமாக பணம் செலுத்தும் வசதியை டாஸ்மாக் ஏற்படுத்த வேண்டும். அவ்வாறு செலுத்தினால் 2 பாட்டில்கள் பெற்றுக்கொள்ளலாம்.
  • சமூக இடைவெளி மற்றும் பாதுகாப்பு கடுமையாக பின்பற்றப்பட வேண்டும்

மதுபானக் கடைகளின் இந்த விற்பனை முறையை உயர்நீதிமன்றம் கண்காணிக்கும் என்றும், ஏதேனும் விதிமீறல்கள் இருந்தால் மதுபானக் கடைகளை மூட உத்தரவிடப்படும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது. மேலும் வழக்கு விசாரணை மே 14ஆம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

முன்னதாக தமிழக அரசு அளித்த விளக்கத்தில், டாஸ்மாக் மது விற்பனையை ஆன்லைனில் மேற்கொள்ள முடியாது என திட்டவட்டமாக தெரிவிக்கப்பட்டது. மொத்த விற்பனை செய்யப்பட மாட்டாது என்றும், தனிநபர்களுக்கு தான் விற்கப்படும் என்றும் உறுதியளிக்கப்பட்டது. அத்துடன் சமூக விலகல் முழுமையாக பின்பற்றப்படும் எனவும், பாதுகாப்பு நடவடிக்கைகளும் வழங்கப்படும் என உத்தரவாதம் அளிக்கப்பட்டது.