தனியார் பள்ளி கழிவுநீரில் தவறி விழுந்து குழந்தை உயிரிழப்பு புதிய தலைமுறை
தமிழ்நாடு

விழுப்புரம்: தனியார் பள்ளி கழிவு நீர்த்தொட்டியில் குழந்தை உயிரிழந்த விவகாரம்... மூவர் கைது!

விழுப்புரம் மாவட்டத்தில் தனியார் பள்ளி கழிவு நீர்த்தொட்டியில் குழந்தை உயிரிழந்த விவகாரம் தொர்பாக மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

PT WEB

திண்டிவனம் வருவாய் வட்டாட்சியர் அலுவலகத்தில் இ சேவை மைய ஒப்பந்த பணியாளராக பணியாற்றும் பழனிவேல் மற்றும் சிவசங்கரி தம்பதியின் மூன்று வயது குழந்தை லியா லட்சுமி, விக்கிரவாண்டியில் தனியார் மெட்ரிகுலேஷன் பள்ளியில் எல்கேஜி படித்துவந்தார்.

தனியார் பள்ளி கழிவுநீரில் தவறி விழுந்து குழந்தை உயிரிழப்பு

பள்ளியில் நேற்று (டிச 3) குழந்தை லியா லட்சுமி, இயற்கை உபாதையை கழிக்க கழிவறைக்குச் சென்றிருக்கிறார். ஆனால் நீண்ட நேரமாகியும் குழந்தை வகுப்பறைக்கு திரும்பவில்லை என சொல்லப்படுகிறது. இதனால், அவரது வகுப்பு ஆசிரியர் அவரை தேடிச் சென்றுள்ளார். எங்கு தேடியும் குழந்தை இல்லாத நிலையில் செப்டிக் டேங்க் மூடி உடைந்திருந்ததை அறிந்துள்ளனர். அங்கே ஆராய்ந்தபோது, குழந்தை உள்ளே விழுந்திருந்தது தெரியவந்தது.

இதனையடுத்து பள்ளி நிர்வாகத்தினர் விக்கிரவாண்டி காவல்துறையினருக்கும் தீயணைப்பு துறையினருக்கும் தகவல் தெரிவித்துள்ளனர். குழந்தை மீட்கப்பட்டு அருகிலுள்ள முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டது. குழந்தை இறந்திருந்ததால், பள்ளிக்கு விடுமுறை அளித்த பள்ளி நிர்வாகத்தினர் உடனடியாக பள்ளி சார்பில் பிற பெற்றோர்களின் செல்போன் எண்களுக்கு அவரவர்களின் குழந்தைகளை விரைந்து அழைத்துச் செல்ல குறுஞ்செய்தி அனுப்பியுள்ளனர்.

ஏன் எதற்கென அறியாத பிற பெற்றோர்கள் விரைந்து வந்து தங்கள் பிள்ளைகளை வீட்டுக்கு அழைத்துச் சென்றுள்ளனர். இதற்கிடையே குழந்தை இறந்த தகவல் அறிந்து சில பெற்றோர்கள் பள்ளி வளாகம் முன்பு திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. சில பெற்றோர்கள் பள்ளி வாயில் முன்பாக விழுப்புரம் சென்னை செல்லும் சாலையில் மறியலிலும் ஈடுபட்டனர்.

மறியல் காரணமாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டதால் போக்குவரத்து காவல்துறையினர் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர். மறியலை கைவிட்ட உறவினர்கள் பள்ளியை முற்றுகையிட்டனர். அதனை தொடர்ந்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அறிவழகன், விக்கிரவாண்டி எம் எல் ஏ அன்னியூர் சிவா நேரில் விசாரணை செய்தனர்.

இந்நிலையில், உயிரிழந்த சிறுமியின் குடும்பத்திற்கு ரூ 3 லட்சம் நிதியுதவி அறிவித்தார் தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின்.

இது குறித்து நேற்று முதல்வர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வட்டம், விக்கிரவாண்டி மேற்கு கிராமத்தைச் சேர்ந்த குழந்தை லியா லக்ஷ்மி (வயது 5) தபெ.பழனிவேல் விக்கிரவாண்டியில் உள்ள தனியார் பள்ளியில் பயின்றுவந்த நிலையில் இன்று (03.01.2025) பிற்பகல் பள்ளியிலிருந்த கழிவு நீர்த் தொட்டியில் எதிர்பாராதவிதமாக தவறி விழுந்து உயிரிழந்த துயரகரமான செய்தியைக் கேட்டு மிகுந்த அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன்.

இந்தச் சம்பவத்தில் உயிரிழந்த குழந்தை லியா லக்ஷமியின் பெற்றோருக்கும். அவரது உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக்கொள்வதோடு, உயிரிழந்த குழந்தையின் பெற்றோருக்கு மூன்று இலட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன்” என்று தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் இது தொடர்பாக குழந்தையின் தந்தை பழனிவேல், தன் குழந்தையின் மரணத்தில் சந்தேகம் உள்ளதாக விக்கிரவாண்டி காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். அந்தப் புகாரின் அடிப்படையில் விக்கிரவாண்டி காவல் நிலைய காவல்துறையினர் சந்தேகம் மரணம், பணியில் அஜாக்கரதையாக இருப்பது ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.

தனியார் பள்ளி கழிவுநீரில் தவறி விழுந்து குழந்தை உயிரிழந்த விவகாரம்

இதில் பள்ளி தாளாளர் எமில்டா, முதல்வர் டோம்னிக் மேரி, வகுப்பு ஆசிரியர் ஏஞ்சல்ஸ், மூவரையும் நேற்று நள்ளிரவு 2 மணிக்கு கைது செய்து விழுப்புரம் மகளிர் காவல் நிலையத்தில் வைத்துள்ளனர். குழந்தையின் உடல் இன்று காலை முண்டியம்பாக்கத்தில் உள்ள விழுப்புரம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யப்பட உள்ளது. மேலும் இன்று பள்ளி உள்ள பகுதியில் மக்கள் கூடக்கூடும் என அஞ்சப்படுவதால், பள்ளி அருகே கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.