தென்காசி அருகே தொடர் சரக்கு வாகன திருட்டில் ஈடுபட்டு வந்த 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நெல்லை மாவட்டம் தென்காசி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில மாதங்களாக சரக்குகளை ஏற்றும் இலகு ரக வாகனங்கள் (டாட்டா ஏஸ்) தொடர்ந்து திருடப்பட்டு வந்தது. இதுதொடர்பாக வாகன உரிமையாளர்கள் காவல் நிலையத்தில் புகார் செய்திருந்தனர். இதனைத்தொடர்ந்து மாவட்ட கண்காணிப்பாளர் ஓம்பிரகாஷ் மீனா உத்தரவின் பேரில் தென்காசி துணை கண்காணிப்பாளர் கோகுலகிருஷ்ணன் மேற்பார்வையில் தென்காசி காவல்துறை ஆய்வாளர் ஆடிவேல் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு தீவிரமாக குற்றவாளிகளை தேடி வந்தனர்.
இந்நிலையில் இன்று தென்காசி இசக்கி மஹால் அருகே தனிப்படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது வாகனத்தில் வந்த சந்தேகத்திற்கிடமான மூன்றுபேரை பிடித்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் மாஞ்சோலை பகுதியைச் சேர்ந்த ராமர், தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த கருப்பசாமி, முனீஸ்வரன் என்பதும் இவர்கள் தென்காசி சுற்றுவட்டாரப் பகுதிகளில் சரக்கு ஏற்றுமதி ரக வாகனங்களை (டாட்டா ஏஸ்) திருடிச்சென்று அதனை உடைத்து விற்பனை செய்துள்ளனர் என்பதும் தெரியவந்தது.
இதனைத்தொடர்ந்து தென்காசி காவல்துறையினர் அவர்களை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ஐந்து இலகுரக சரக்கு வாகனங்கள், உடைத்து விற்பனை செய்யப்பட்ட நான்கு வாகனத்திற்கு உரிய பணத்தை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். இதன் மொத்த மதிப்பு சுமார் 50 லட்சம் என போலீசார் தெரிவிக்கின்றனர்.
கைது செய்யப்பட்ட 3 பேரும் தென்காசி குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டனர். மேலும் அவர்கள் மீது இதுபோன்ற திருட்டு வழக்குகள் பல மாவட்டத்தில் உள்ளது எனவும் இந்த வழக்கின் முக்கிய குற்றவாளியான தூத்துக்குடி பகுsதியை சேர்ந்த ராஜ பாண்டி, கடந்த சில மாதங்களுக்கு முன்பு கொலை செய்யப்பட்டதில் ராமர் முக்கிய குற்றவாளி எனவும் காவல்துறையினர் தெரிவித்தனர்.
மேலும் பொதுமக்கள் தங்களது வாகனங்களை சாலை ஓரங்களில் பாதுகாப்பில்லாமல் நிறுத்த வேண்டாம் என்று காவல்துறையினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.